விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள், கைதுகள் தொடர்பில் அச்சமடையத் தேவையில்லை. அவர்களுக்கு ஆதரவாக நிச்சயம் குரல் கொடுப்பேன் என பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
அத்துடன், முன்னாள் போராளிகளுக்கு ஒளிமயமான எதிர்காலத்தை ஏற்படுத்தி கொடுப்பேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தனது முகநூல் ஊடாக வெளியிட்டுள்ள காணொளி பதிவில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்துள்ள அவர், தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்ப்பட்டுள்ளதாக தெரிவித்து, முன்னாள் போராளிகள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், முன்னாள் போராளிகள் பலர் தன்னுடன் தொடர்பு கொண்டு இந்த கைது நடவடிக்கைகளில் இருந்து தம்மை காப்பாற்றுமாறு கோரிக்கை விடுக்கின்றனர்.
அத்துடன், முன்னாள் போராளிகளான தம்மை சந்தோசமாகவும், சுதந்திரமாகவும், வாழ முடியாத நிலைமைகளை உருவாக்கி வருகின்றார்கள் எனவும் அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
எனவே, அதிலிருந்து தம்மை பாதுகாக்குமாறு முன்னாள் போராளிகள் தன்னிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில், அவர்களின் கோரிக்கைகளை ஏற்று பிரதமர் மற்றும் ஜனாதிபதியுடன் கலந்துரையாடியுள்ளேன்.
எனவே, முன்னாள் போராளிகள் எனவரும் அச்சமடைய தேவையில்லை. குறித்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளின் மூலம் இந்த செய்தி உண்மையா பொய்யா என்பது தெரிய வரும்.
இது குறித்து நல்லாட்சி அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்கும் என நம்புகின்றேன். எனவே, முன்னாள் போராளிகள் அச்சமடைய தேவையில்லை. உங்களுக்காக நான் குரல் கொடுப்பேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.