கதாநாயகிகள் பலர் படப்பிடிப்புகளிலும், பொது இடங்களிலும் ரசிகர்களின் அத்து மீறல்களையும் ஈவ்டீசிங்கையும் சந்திப்பது வழக்கமாக இருக்கிறது. டுவிட்டர், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களிலும் இந்த தொந்தரவுகளை எதிர்கொள்கிறார்கள். இதனால் பலர் டுவிட்டரையே மூடி விட்டு போய் உள்ளனர்.
நடிகைகள் நயன்தாரா, ஸ்ரேயா, நமீதா, தமன்னா உள்ளிட்ட பல நடிகைகள் விமான நிலையங்கள், பொது நிகழ்ச்சிகள் போன்றவற்றில் ரசிகர்களின் தொல்லைகளில் சிக்கி இருக்கிறார்கள். இந்தி நடிகை தீபிகா படுகோனே ஒரு விழாவுக்கு வந்தபோது ரசிகர்கள் பிடியில் சிக்கி மீட்கப்பட்டார். கத்ரினா கயீப் கொல்கத்தா விழா நிகழ்ச்சியிலும் சோனம்கபூர் சினிமா தியேட்டரிலும் சோனாக்சி சின்ஹா கூட்டத்திலும் ரசிகர்களால் கசப்பான அனுபவங்களை சந்தித்துள்ளனர்.
இதற்காக பல நடிகைகள் தனியார் பாதுகாவலர்களை வேலைக்கு வைத்துள்ளனர். பொதுநிகழ்ச்சிகளுக்கு செல்லும்போது இவர்களையும் அழைத்து செல்கிறார்கள். அதையும் தாண்டி ரசிகர்கள் அத்துமீறல்கள் நடந்து கொண்டு தான் இருக்கிறது. பல நடிகைகள் அவற்றை வெளியே சொல்வது இல்லை. சிலர் போலீசில் புகார் அளித்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்து இருக்கின்றனர்.
நடிகை இலியானாவும் செக்ஸ் தொல்லையை சந்தித்ததாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டு உள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-
“பெண்களை பலர் பைத்தியக்காரத்தனமாகவும் கேவலமாகவும் பார்க்கிறார்கள். இந்த நிலைமை மாற வேண்டும். நான் சமூக வலைத்தளங்களில் ஈவ் டீசிங் உள்ளிட்ட செக்ஸ் தொல்லைகளை சந்தித்து நேரடியாகவே பாதிக்கப்பட்டேன். அடிக்கடி மோசமான பல தகவல்கள் எனது போனில் வந்தன. ஆபாசமாக பேசி குரல் பதிவுகளையும் அனுப்பினார்கள். இது எனக்கு வேதனையை ஏற்படுத்தியது. அதிர்ச்சியாகவும் இருந்தது. அந்த தகவல் மற்றும் குரல்பதிவுகளை அழித்து விட்டேன். ஒரு பெண்ணாக இதை வெளியில் சொல்வதற்கு சங்கடமாக இருக்கிறது.
இக்கட்டான நேரத்தில் எனது பெற்றோர்கள் ஆறுதலாக இருந்தார்கள். அவர்களால் இந்த செக்ஸ் தொல்லைகளில் இருந்து மீள மனதை உறுதியாக்கிக் கொண்டேன். பெண்களை யாரும் கேவலமாக பார்க்க கூடாது.”
இவ்வாறு இலியானா கூறினார்.