எந்த தலைமையையும் ஏற்கவில்லை ‘கருணாநிதியை சந்தித்து முடிவை தெரிவிப்பேன்’: ராதாரவி பேச்சு

தி.மு.கவில் முக்கிய பிரமுகராக இருந்த ராதா ரவி, கருத்து வேறுபாடு காரணமாக அதில் இருந்து விலகினார்.
பின்னர் அன்றைய அ.தி.மு.க செயலாளரும், முதல்-அமைச்சருமான ஜெயலலிதாவை சந்தித்து அ.தி.மு.கவில் சேர்ந்தார். தேர்தலின்  போது அ.தி.மு.கவுக்கு தீவிர பிரசாரம் செய்தார்.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அந்த கட்சியின் முக்கிய நிர்வாகிகள் சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்தனர். தற்போது அ.தி.மு.க பொதுச்  செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சசிகலாவை கட்சியின் முக்கிய நிர்வாகிகள், பிரமுகர்கள் அனைவரும் சந்தித்து வருகிறார்கள்.  ஆனால் இதுவரை ராதாரவி அவரது முடிவை தெரிவிக்காமல் இருந்தார்.
இந்த நிலையில் இன்று பழனியில் நடந்த நடிகர் வாகை சந்திரசேகரின் மகள் திருமணவிழாவில் ராதாரவி கலந்து கொண்டார் .  மணமக்களை வாழ்த்தி அவர் பேசியதாவது:-
தற்போது எந்த தலைமையும் எனக்கு இல்லை. விரைவில் நல்ல முடிவை அறிவிப்பேன்.
எனது சித்தப்பாவாக கருதும் தி.மு.க தலைவர் கருணாநிதி விரைவில் உடல்நலம் பெற்று குணமடைவார். அவரை சந்தித்து எனது  முடிவை தெரிவிப்பேன்.
இவ்வாறு ராதாரவி கூறினார்.
அப்போது அங்கு இருந்த தி.மு.க நிர்வாகிகள் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர்.
ராதாரவியின் இந்த பேச்சின் மூலம் விரைவில் தி.மு.க.வில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.