ஜனாதிபதியின் உத்தரவை மீறி காணிகளை விடுக்காது இழுத்தடிப்பு செய்யும் .ராணுவத்தினரின் செயற்பாடு, ஜனாதிபதியை அவமானப்படுத்துவதாக அமைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகமும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆனந்தசங்கரி இதனை தெரிவித்துள்ளார்.
தமது காணிகளை உடனடியாக விடுவிக்குமாறு கோரி தொடர் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டுவரும் கேப்பாப்பிலவு, பிலக்குடியிருப்பு கிராம மக்களை நேற்று சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர்,
தமிழ் மக்களின் காணிப் பிரச்சினையானது மிகவும் பாரதூரமானது. ஆனால் இந்த கேப்பாப்பிலவு காணிப்பிரச்சினையானது சாதாரணமானதாகும்.
ஏனெனில், இக்காணியை விடுவிக்குமாறு ஜனாதிபதியே உத்தரவிட்டுள்ளார்.
ஆனால், ஜனாதிபதியின் உத்தரவையும் மீறி காணிகளை விடுக்காது இழுத்தடிப்பு செய்யும் இராணுவத்தினரின் செயற்பாட்டை மன்னிக்க முடியாது.
எனவே இது தொடர்பில் உரிய அதிகாரிகள் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரசாங்கத்திலுள்ள அனைவரும் அதிகாரங்களை கையிலெடுக்க முயல்வதனாலேயே இப்பிரச்சினை எழுந்துள்ளது. எனவே இது குறித்து நான் ஜனாதிபதிக்கு மகஜரொன்றை அனுப்பி வைக்கவுள்ளேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.