இலங்கையில் பௌத்த மத கற்கைகளுக்கான மத்திய நிலையமொன்றை தாபிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனை தெரிவித்துள்ளார்.
பௌத்த மத பிரிவுகளில் ஒன்றான ராமஞ்ஞ நிகாயவின் தலைமை நிலையம் நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் கொழும்பு, நாரஹேன்பிட்டவில் திறந்து வைக்கப்பட்டது.
இதனையடுத்து அங்கு உரையாற்றும்போது ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி,
இலங்கையில் பௌத்த மத கற்கை மற்றும் பௌத்த போதனைகளின் முக்கிய தொகுப்பான திரிபிடக நூல் தொடர்பான ஆய்வுகள் மற்றும் கற்கைகளை மேற்கொள்வதற்கான மத்திய நிலையமொன்றை தாபிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவுள்ளது.
இது தொடர்பில் மகாநாயக்கர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் வெசக் தினத்தை ஐக்கிய நாடுகள் சபையின் வெசக் தினமாக இலங்கையில் கொண்டாடப்படும்.
அதே சமயத்தில் குறித்த மத்திய நிலையத்தை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.
குறித்த வைபவத்தில் ஜனாதிபதியுடன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சபாநாயகர் கரு ஜயசூரிய, கல்வி அமைச்சர் அகில விராஜ், அமைச்சர்களான தயாகமகே, ஜோன் செனவிரத்ன உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.