காஷ்மீரில் பனிப்பொழிவுக்கு இடையே தாயின் உடலை 50 கி.மீ. சுமந்து வந்த ராணுவ வீரர்!!

தேசத்தை காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்களின் வாழ்வில் எத்தகைய சோக சம்பவங்கள் எல்லாம் நடந்து விடுகின்றன என்பதற்கு உதாரணமாக ஒரு சம்பவம் நடந்திருக்கிறது.

காஷ்மீர் மாநிலம், குப்வாரா மாவட்டம், கர்னா பகுதியை சேர்ந்தவர் ராணுவ வீரர் முகமது அப்பாஸ். இவர் பஞ்சாப் மாநிலம் பதன்கோட்டில் பணியாற்றி வருகிறார். இவருடன் வசித்து வந்த தாயார் சகினா பேகம் கடந்த 28-ந்தேதி இதய நோயால் மரணம் அடைந்தார்.

தாயாரின் உடலை இறுதிச்சடங்குக்காக சொந்த ஊருக்கு அவர் எடுத்து வந்தார். ஆனால் குப்வாரா மாவட்டம், சவ்கிபால் வரை வந்து விட்ட அவர், தொடர்ந்து கர்னாவுக்கு போக முடியாத வகையில் பனிக்கட்டிகளால் அந்தப் பகுதி சாலை துண்டிக்கப்பட்டு விட்டது.

ஹெலிகாப்டருக்காக மாவட்ட நிர்வாகத்தை அணுகியும், மோசமான பனிப்பொழிவு காரணமாக 5 நாள் காத்திருந்தும் பலன் இல்லை.

எனவே தன்னுடைய தாயின் விருப்பதை நிறைவேற்ற அவரது உடலை நடையாகவே தூக்கி செல்லலாம் என்று அப்பாஸ் முடிவு செய்தார்.

அதன்படி சில நெருங்கிய உறவினர்கள், கிராமத்தார்கள் உதவியுடன் அவர் தனது தாயாரின் உடலை தோள்களில் சுமந்தபடி, பனி படர்ந்த சத்னா டாப் என்னும் மலைச் சிகரத்தை நடந்தே கடந்து கர்ணாவுக்கு செல்வது என்று முடிவெடுத்து புறப்பட்டு, நடந்து தனது கிராமத்தை அடைந்தார். அதன்பின்னர் தாயின் உடலை அங்கு நல்லடக்கம் செய்தார். இந்த சம்பவம், அந்தப்பகுதி மக்களை மட்டுமல்ல, அனைவரின் நெஞ்சையும் நொறுக்குவதாக அமைந்து விட்டது.

மோசமான வானிலை காரணமாகத்தான் எங்களால் எதுவும் உதவி செய்ய முடியவில்லை. இருந்த போதிலும் நேற்றுதான் எங்களால் ஹெலிகாப்டர் ஒன்றை ஏற்பாடு செய்ய முடிந்தது. ஆனால்  அதற்க்குள் அவர்கள் புறப்பட்டு விட்டனர் என்று மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ராணுவ செய்தி தொடர்பாளர் கலோனியல் ராஜேஷ் கைலா செய்தியாளர்களிடம் பேசுகையில், மரணம் அடைந்த பெண்ணின் உடலை கொண்டு சேர்க்க எங்களால் இயன்ற அனைத்து உதவிகளையும் செய்தோம் என்றார்.