டிரம்ப்பின் நடவடிக்கையால் ஒரு லட்சத்திற்கும் அதிகமான விசாக்கள் ரத்து!!

ஏழு இஸ்லாம் நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து ஒரு லட்சத்திற்கும் அதிகமான விசாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அரசு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். அகதிகளை அமெரிக்காவிற்குள் நுழைய விதிக்கப்பட்டுள்ள தடை நடவடிக்கைக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

ஏமனை சேர்ந்த சகோதரர்கள் டல்லஸ் விமான நிலையத்தில் இருந்து எத்தியோப்பியாவிற்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டதை தொடர்ந்து அவர்கள் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணையின் மூலம் விசாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ள விபரம் தெரியவந்துள்ளதாக கூறப்படுகின்றது. முன்னதாக பாதுகாப்பு காரணங்களுக்காக டல்லஸ் விமான நிலையத்தில் சிறுவன் கைது செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

தடை செய்யப்பட்ட நாடுகளை சேர்ந்தவர்களில் எத்தனை பேர் டல்லஸ் விமான நிலையத்தில் இருந்து அவர்களது சொந்த நாடுகளுக்கு திரும்ப அனுப்பி வைக்கப்பட்டனர் என்ற தகவலை அரசு வழக்கறிஞர்கள் தெரிவிக்க முடியாது என அமெரிக்காவில் இருந்து வரும் செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டுள்ள புதிய உத்தரவு 120 நாட்களுக்கு நீடிக்கும். இந்த காலகட்டத்தில் அமெரிக்காவிற்குள் நுழைய ஏழு நாடுகளை சேர்ந்தவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை அகதிகளுக்கும் பொருந்தும் என்பதும் குறிப்பிடத்தக்கது.