ஒரு அதிகாலை நேரத்தில் கிருஷ்ணர், அர்ச்சுனனுடன் உரையாடிக்கொண்டிருந்தார். அப்போது அவர்களின் பேச்சு, மக்களுக்கு தான, தருமங்கள் செய்வது பற்றி சென்றது. அப்போது கிருஷ்ணர், கர்ணனின் கொடை தன்மை பற்றி உயர்வாக பேசிக்கொண்டிருந்தார். இதைக் கேட்ட அர்ச்சுனனுக்கு கோபம் தலைக்கேறியது.
உடனே அவன், ‘பணம் இருந்தால் யார் வேண்டுமானாலும் கொடை வள்ளல் ஆகலாம்’ என்றான்.
‘ஓ.. அப்படியா?’ என்று கேட்டபடி நமுட்டுச் சிரிப்பு சிரித்த கிருஷ்ணர், அந்தப் பகுதியில் இருந்த ஒரு சாதாரண மலைக் குன்றை தங்க மலையாக மாற்றினார்.
பின்னர் அர்ச்சுனனிடம், ‘அர்ச்சுனா! இந்த தங்க மலையை, நான் உனக்கு பரிசாக அளிக்கிறேன். இந்த மலையை நீ, இன்று மாலை சூரியன் மறைவதற்குள் தானம் செய்து விட வேண்டும். அவ்வாறு செய்து விட்டால், நீதான் இந்த உலகத்திலேயே மிகப்பெரிய வள்ளல்’ என்று கூறி விட்டு அங்கிருந்து சென்று விட்டார்.
அர்ச்சுனன் தன்னைத் தேடி வந்தவர்களுக்கெல்லாம் அந்த தங்க மலையை கொஞ்சம் கொஞ்சமாக வெட்டிக் கொடுத்துக் கொண்டே இருந்தான். மக்கள் வண்டி, வண்டியாக வந்து அர்ச்சுனன் கொடுத்த தானத்தை வாங்கிச் சென்றனர். காலை, மதியமாகி, அந்தி சாயும் வேளையை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது. சூரியன் மேற்கில் மறைவதற்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்தான். ஆனால் அர்ச்சுன் வெட்டிக் கொடுத்துக் கொண்டிருந்த தங்க மலை குறைந்தபாடில்லை. கால்வாசி மலை தான் வெட்டப்பட்டு இருந்தது.
அந்த சமயத்தில் மீண்டும் அங்கு வந்தார் கிருஷ்ணர். ‘என்னப்பா அர்ச்சுனா! நான் கொடுத்த தங்க மலை அப்படியே இருக்கிறதே! இன்னுமா நீ இதை தானம் செய்து முடிக்கவில்லை’ என்று ஏளனமாக கேட்டார் கிருஷ்ணர்.
அப்போதும் தன்னுடைய கர்வத்தை விட்டுக் கொடுக்காத அர்ச்சுனன், ‘நீங்கள் புகழ்ந்து பேசிய கர்ணனாக இருந்தால் கூட, இவ்வளவு தான் தானம் செய்து இருக்க முடியும்’ என்றான்.
‘அப்படியா..’ என்று சிரித்துக் கொண்டே கேட்ட கிருஷ்ணர், அந்த வழியாக சென்ற கர்ணனைக் கூப்பிட்டார். கர்ணன் ஓடி வந்து கிருஷ்ணரை வணங்கியபடி நின்றான். பின்னர், ‘கிருஷ்ணா! தங்களுக்கு ஏதேனும் ஒரு வகையில் உதவக்கூடிய பாக்கியம் எனக்கு கிடைக்குமா?’ என்று கேட்டான்.
அதற்கு கிருஷ்ணர், ‘ஒன்றுமில்லை கர்ணா! இதோ பார்! இந்த தங்க மலையை சூரியன் மறைவதற்குள் நீ தானம் செய்ய வேண்டும். உன்னால் முடியுமா? ஏனென்றால் சூரியன் மறைவதற்கு இன்னும் சிறிது நேரம்தான் இருக்கிறது. காலையில் இருந்து தானம் செய்து வரும் அர்ச்சுனனாலேயே இந்த தங்க மலையை தானம் கொடுத்து முடிக்க முடியவில்லை’ என்றார்.
கிருஷ்ணர் இவ்வாறு சொல்லி முடித்தபோது, அந்த வழியாக பரம ஏழை ஒருவர் வந்தார். அவர் கர்ணனைப் பார்த்ததும், ‘ஐயா! நானும்.. என் குடும்பமும் மிகவும் ஏழ்மையில் தவிக்கிறோம். இன்றைய உணவுக்காவது ஏதாவது கொடுத்தால் நான் மகிழ்வேன்’ என்றார்.
உடனே கர்ணன், ‘ஐயா..! இந்த தங்க மலையை நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள்’ என்று கூறினான். பின்னர் கிருஷ்ணரிடம் விடைபெற்றுக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டான்.
கர்ணன் சென்றதும் கிருஷ்ணன் அர்ச்சுனனிடம் கூறினார். ‘இப்போது புரிகிறதா? யார் கொடை வள்ளல் என்று. பிறருக்கு உதவ பணம் மட்டும் இருந்தால் போதாது. அவர்களுக்கு உதவ வேண்டும் என்ற நல்லெண்ணமும், அதை செயல்படுத்த ஈகை குணமும் நம் உள்ளத்தில் உதிக்க வேண்டும். மேலும், நீ தானத்தை அளந்து கொடுத்தாய். ஆனால் கர்ணனோ, தன்னிடம் இருப்பது என்ன என்ற அளவீடே இல்லாமல் இருப்பதை அப்படியே கொடுக்கும் குணம் பெற்றவன். அதனால்தான் அவனது கொடை தன்மை சிறந்து விளங்குகிறது’ என்றார் கிருஷ்ணர்.