பிறப்பில்லாத முக்தி நிலையை அடைவதற்கு, சிவபெருமானையே சரணடைய வேண்டும் என்கின்றன புராணங்கள். ஏனெனில் சிறு தெய்வங்களின் வழிபாட்டிற்கு நம்முடைய பிறவியை ஒழிக்கக் கூடிய சக்தி இல்லை. அது படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்ற ஐந்தொழில்களையும் ஒருங்கே செய்துவரும் பரமேஸ்வரனால் மட்டுமே சாத்தியமான ஒன்று. சிவம் என்ற பரம்பொருள் ஒருவரே சிறப்புக்குரியவர். அவரே இறைவனுக்கெல்லாம் இறைவன். எல்லோருக்கும் முன்னோடி. பிறப்பும், இறப்பும் இல்லாதவர் என்கின்றன புராணங்கள்.
இதையே ‘தாயுமிலி தந்தையிலி தான் தனியன்’, ‘ஆதியும் அந்தமும் இல்லாத அருட்பெருஞ்சோதி’ என்று திருவாசகமும், ‘பிறவா யாக்கை பெரியோன்’ என்று சிலப்பதிகாரமும் போற்றிப் புகழ்கின்றன.
சிவபெருமான் ஆதியும் அந்தமும் இல்லாதவர், அவர் பிறப்புக்கும், இறப்புக்கும் அப்பாற்பட்டவர், அவரே உலகத்தின் முன்னோடி என்பதை கந்தபுராணம் எவ்வாறு சிறப்பித்து கூறுகிறது என்பதைப் பார்க்கலாம்.
காலங்களை இரண்டு வகையாக பிரிக்கலாம். அவை, தேவ ஆண்டு கணக்கு, பூலோக ஆண்டு கணக்கு.
பூலோகத்தில் ஒரு வருடம் என்பது, தேவலோகத்தில் ஒரு நாள் ஆகும். அதே போல் பூலோகத்தில் 360 வருடம் என்பது, தேவலோகத்தில் ஒரு வருடம். மும்மூர்த்திகளில் சிவபெருமானைத் தவிர, மற்ற இரு தெய்வங்களான பிரம்மாவுக்கும், மகா விஷ்ணுவுக்கும் கூட ஆயுட் காலம் உண்டு.
தேவ ஆண்டு கணக்கில் 4,800 வருடம் கிர்த யுகம். 3,600 ஆண்டுகள் திரேதா யுகம். 2,400 ஆண்டுகள் துவாபர யுகம், 1,200 ஆண்டுகள் கலி யுகம். இந்த நான்கு யுகங்களையும் கூட்டினால் 12 ஆயிரம் ஆண்டுகள் வரும். தேவ ஆண்டு கணக்கில் 12 ஆயிரம் ஆண்டுகள் என்பது ஒரு சதுர் யுகம் எனப்படுகிறது.
ஆயிரம் சதுர் யுகம் சேர்ந்தால் பிரம்மாவிற்கு ஒரு பகல், ஆயிரம் சதுர்யுகம் சேர்ந்தால் பிரம்மனுக்கு ஒரு இரவு. அதாவது இரண்டாயிரம் சதுர்யுகம் என்பதே பிரம்மதேவனுக்கு ஒரு நாள் ஆகும். இந்த நாள், மாதமாகி, மாதம் வருடமாகி, இதில் நூறு வருடம் ஆனால், ஒரு பிரம்மாவின் ஆயுட்காலம் முடிவடைகிறது.
ஒரு கோடி பிரம்மாவின் ஆயுட்காலம் முடிந்தால், விஷ்ணுவுக்கு ஒரு பகல்; இன்னொரு கோடி பிரம்மாவின் ஆயுட்காலம் முடிந்தால் விஷ்ணுவுக்கு ஒரு இரவு ஆகும். இரண்டு கோடி பிரம்மாவின் ஆயுட்காலம் முடிந்தால், மகாவிஷ்ணுவுக்கு ஒரு நாள். இந்த நாள் மாதமாகி, மாதம் வருடமாகி, நூறு வருடம் ஆனால் ஒரு விஷ்ணுவின் ஆயுள் முடிவடைகிறது.
ஒரு கோடி விஷ்ணுவின் ஆயுள் காலம் முடிந்தால் சிவபெருமானுக்கு கண் இமைக்கும் நேரம் ஆகும்.
அதனால்தான் திருநாவுக்கரசர் தனது தேவாரப் பாடலில்,
‘நூறு கோடி பிரமகர்கள் நொந்தினார்
ஆறு கோடி நாராயண ரங்கனே
ஏறு கங்கை மணல் எண்ணில் இந்திரர்
ஈறி லாவன் ஈசன் ஒருவனே’ என்று குறிப்பிடுகிறார்.
எனவே பிறப்பு, இறப்பில்லா பெருந்தெய்வம் சிவபெருமான் ஒருவரே என்கிறது கந்தபுராணம்.