வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் பிரபல கிரிக்கெட் வீரர் பிரைன் லாரா. டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்சில் 400 ரன் குவித்த சாதனை வீரரான அவர் ஐதராபாத்தில் நடந்த கடைசி கோல்ப் போட்டியில் விளையாடினார்.
அப்போது லாரா அளித்த பேட்டியில் கூறியதாவது:-
இந்திய கிரிக்கெட் அணி எப்போதுமே உள்ளூரில் சிறப்பாக விளையாடும். சொந்த மண்ணில் விளையாடும் போது அந்த அணி சிறந்ததாக திகழும் பன்முக தன்மையுடைய வீரர்கள் நன்றாக ஆடி வருகிறார்கள்.
தற்போதைய சூழ்நிலையில் உலகின் சிறந்த பேட்ஸ்மேன் வீராட்கோலி ஆவார். அவரது கேப்டன் பதவியின் செயல்பாடும் முற்றிலும் மாறுபட்டது. அவர் தனது சொந்த ஸ்டைலில் கேப்டனாக செயல்படுகிறார்.
வீராட்கோலியின் சிறப்பான பேட்டிங்குக்கு தெண்டுல்கரின் முயற்சிதான் காரணம். அவரது உத்வேகமான ஆட்டம் தான் கோலியின் மனதில் இருக்கிறது.
தெண்டுல்கரின் ஆட்டத்தை பார்த்துதான் திறமையான வீரர்கள் தற்போது உலகில் உருவாகி வருகிறார்கள்.
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் நிர்வாகத்தில் பொறுப்பு வகிக்க நான் தற்போது விரும்பவில்லை. வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் நிர்வாகத்தில் அரசியல் விளையாட்டு நடக்கிறது. இளம் வீரர்களுக்கு உதவுவதே எனது முக்கியமான பணியாகும்.
இவ்வாறு லாரா கூறியுள்ளார்.
47 வயதான லாரா கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று 10 ஆண்டுகள் ஆகிறது. 1990 முதல் 2007 வரை 17 ஆண்டுகள் சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார்.
131 டெஸ்டில் 11,953 ரன் எடுத்துள்ளார். சராசரி 52.88 ஆகும். 34 சதமும், 48 அரை சதமும் அடங்கும். 299 ஒரு நாள் போட்டியில் விளையாடி 10,405 ரன் எடுத்துள்ளார். சராசரி 40.48 ஆகும். 19 சதமும், 63 அரை சதமும் அடித்துள்ளார்.