சசிகலா முதல்வராகப் பொறுப்பேற்கவுள்ளாராமே என்று செய்தியாளர்கள் கேள்வி கேட்டதற்கு முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பதிலளிக்க மறுத்து விட்டார். மாறாக தனது டிரேட் மார்க் புன்னகையை மட்டும் சிந்தி விட்டுப் போனார் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்.ஆனால் அவர் தனது முடிவை நினைத்துத்தான் சிரித்துள்ளார் என்பது இப்போது புரிந்து தமிழக மக்கள் அதிர்ந்து போய் நிற்கின்றனர்.
குறுகிய காலத்தில் 2வது முறையாக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தைக் கூட்டினார் சசிகலா. இதனால் ஓ.பன்னீர் செல்வத்திடமிருந்து முதல்வர் பதவி பறி போகப் போகிறதா என்ற பெரும் பரபரப்பு கிளம்பியது. மக்கள் மத்தியில் ஓ.பன்னீர் செல்வம் நல்ல பெயர் வாங்கிக் கொண்டுள்ள நிலையில் மக்கள் மத்தியில் கடும் அதிருப்திக்குள்ளாகியுள்ள சசிகலா வசம் அந்தப் பதவி போய் விடுமோ என்ற அதிர்ச்சியும் மேலோங்கியிருந்தது.
இந்த நிலையில் சென்னை எண்ணூர் கடல் பகுதியில் எண்ணெய்ப் படல பாதிப்பை ஆராய முதல்வர் இன்று வருகை தந்தார். அவருடன் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்ட அதிகாரிகளும், சசிகலா ஆதரவு அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோரும் வந்திருந்தனர். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்.
அப்போது செய்தியாளர் ஒருவர் சசிகலா முதல்வராகப் போகிறாராமே என்ற கேள்வியைக் கேட்டார். அதற்கு முதல்வர் பதிலளிக்கவில்லை. மாறாக வழக்கம்போல தனது டிரேட் மார்க் வெள்ளந்தி சிரிப்பை சிந்தி விட்டு நகர்ந்தார் முதல்வர். முதல்வரின் இந்த சிரிப்புக்கு என்ன அர்த்தம் என்றுதான் விளங்கவில்லை…
ஆனால் தற்போது முதல்வர் பதவியை சசிகலாவிடம் சத்தமில்லாமல் ஒப்படைத்து விட்டு மறுபடியும் அதே சிரிப்புடன் அதிமுக தலைமைக் கழக அலுவலகத்தில் அவர் நின்றிருந்ததைப் பார்த்து ஒட்டுமொத்த தமிழர்களும் அதிர்ந்து போய் நிற்கின்றனர்.