ஜெயலலிதா வழியில் ஆட்சி நடத்துவேன் : அதிமுக எம்எல்ஏக்களிடம் சசிகலா பேச்சு

சென்னையில் நடைபெற்ற அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலா சட்டசபை குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். எம்எல்ஏக்களுக்கு நன்றி தெரிவித்த அவர் ஜெயலலிதா வழியில் ஆட்சி நடத்துவேன் எனக்கூறியுள்ளார்.

கடந்த டிசம்பர் 5ஆம் தேதி தமிழக முதல்வர் ஜெயலலிதா சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைப்பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து அதிமுக பொதுச்செயலாளராக அவரது தோழி சசிகலா பதவியேற்றார்.

இந்நிலையில் இன்று நடைபெற்ற அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் சசிகலா அதிமுக சட்டசபை குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதைத்தொடர்ந்து அதிமுக தலைமைக் கழகத்துக்கு பச்சைப் புடவையில் வந்த சசிகலா எம்எல்ஏக்கள் கூட்டத்தில் எழுதி வைத்திருந்ததை படித்தார்.

அப்போது சட்டசபைக் குழு தலைவராக தேர்வு செய்ததற்கு எம்எல்ஏக்களுக்கு அவர் நன்றி தெரிவித்தார். மேலும் அவர் கூறியதாவது, அதிமுக பொதுச்செயலாளராகவும் முதல்வராகவும் பதவியேற்க தன்னை முதன்முதலில் வலியுறுத்தியது ஓ.பன்னீர்செல்வம் தான்.

அனைவரின் வேண்டுகோளையும் ஏற்றுதான் அடுத்த முதல்வராக பதவியேற்க உள்ளேன். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கனவை நிறைவேற்றுவேன். ஜெயலலிதா வழியில் ஆட்சி நடத்துவேன். இவ்வாறு சசிகலா பேசினார்.