ஜெயலலிதா மிகவும் கஷ்டப்பட்டு அரசியலுக்கு வந்தார் என்றும் அவரும் சசிகலாவும் ஒன்றா என்றும் பாஜக மாநில தலைவர் தமிழிசை கேள்வி எழுப்பியுள்ளார்.
அதிமுகவின் பொதுச் செயலாளர் சசிகலா முதல்வராக பதவி ஏற்கும் வகையில் இன்று அவர் சட்டசபைக் குழு தலைவராக அக்கட்சியின் எம்எல்ஏக்களால் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து தமிழிசை கூறியதாவது:
ஜெயலலிதா மறைந்த போது, அக்கட்சி எம்எல்ஏக்கள் தேர்வு செய்துதானே ஓபிஎஸ் முதல்வர் ஆனார். அதற்குள் எதற்காக அவரை மாற்ற வேண்டும். பொதுச் செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டது அவர்களது உட்கட்சி விவகாரம். இந்தப் பதவியில் சசிகலா செம்மையாக செயல்பட்டு, அதன் மூலம் நல்ல அனுபவம் பெற்று, பின்னர் மெதுவாக முதல்வராக பதவி ஏற்றிருக்கலாம். இப்படி அவசர அவசரமாக தேர்வு செய்யப்பட்டுள்ளதற்கான காரணம் என்ன?
சசிகலா தனிப்பட்ட ரீதியில் ஜெயலலிதாவின் நிழலாக இருந்திருக்கலாம். ஆனால், அரசியல் எப்படி என்பது யாருக்கும் தெரியாது. அப்போதே நிழலாக இருந்திருந்தால் சிக்கலான நேரங்களில் ஏன் ஓபிஎஸ்சை முதல்வராக ஜெயலலிதா தேர்ந்தெடுத்தார். வீட்டுக்கான தலைவராக இருந்து நாட்டுக்கான தலைவராக பரிமளிக்க முடியுமா என்றால் அதற்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும் என்று தமிழிசை கூறியுள்ளார்.