மகிந்தவுடன் கே.பியும் கருணாவும் களத்தில்: புதிய திருப்பம்? கொழும்பு ஊடகம் தகவல்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆட்சிக் கவிழ்ப்பை நிறைவேற்றிக் கொள்வதற்காக விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தகர்களாக இருந்தவர்களை இணைத்துக் கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகிந்த ஆட்சிக் கவிழ்ப்பை எவ்விதம் நிறைவேற்றப் போகின்றார்? அவருடைய திட்டம் என்ன? உண்மையில் மகிந்த தலைமையில் நுகே கொடையில் இடம் பெற்ற கூட்டத்தின் நோக்கம் என்ன?

போன்ற கேள்விகளுக்கு பதில் அளிக்கும் வகையில் கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

குறித்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

மகிந்த ஆட்சியை மீண்டும் பெற்றுக் கொள்வதற்காக முறைகேடான வழிகளைப் பின்பற்றிக் கொண்டு வருகின்றார்.

அந்த வகையில் அவர் விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தராக இருந்த கருணாவை களம் இறக்கி உள்ளார். கருணா என்பவர் இன்றும் அரசிடம் ஆயுதங்களை ஒப்படைக்காத குற்றவாளியே.

அரந்தலாவையில் புத்த பிக்குகளை வெட்டிக் கொலை செய்தவர், அதேபோன்று தேசத்தின் சொத்தான தலதா மாளிகைக்கு குண்டு வைத்தவரும் கருணாவே.

நடு இரவில் சிங்கள மக்கள் குடியிருப்பு பகுதிகளில் புகுந்து வெட்டிக் கொலைகள் செய்தவர். இவர் செய்த கொலைகளும் குற்றங்களும் நாட்டு மக்களுக்கும் மகிந்தவிற்கும் நன்றாக தெரியும்.

இது தெரிந்திருந்தும் மகிந்தவிற்கு தற்போது அவசியப்படுவது இந்த நாட்டை இரத்தக் களறியாக மாற்றி சரி சிம்மாசனத்தை பெற்றுக் கொள்வது மட்டுமே.

அது மட்டும் அல்லாது மகிந்த இன்று ஆட்சியில் இருந்தால் பிள்ளையான் இன்றும் முதலமைச்சராகவே இருந்திருப்பார். அதே போன்று கருணாவும் மகிந்தவிற்கு முக்கிய புள்ளி.

கருணா வரும் போது இராணுவத் தலைவர்களும், கோத்தபாய ராஜபக்சவும் கூட எழுந்து நின்று மரியாதை தெரிவிக்கும் நிலை அப்போது காணப்பட்டது.

மகிந்தவிற்கு உதவி செய்த விடுதலைப்புலிகளின் முக்கியஸ்தர் எமிழ்காந்தன் இன்றும் இங்கிலாந்து நாட்டில் பாதுகாப்பாக இருக்கின்றார்.

அவர் சரியான சந்தர்ப்பத்தில் மகிந்தவிற்கு உதவி செய்வதற்காக வந்து சேர உள்ளார். மேலும் அதே போல தங்கத்தையும், கப்பல்களையும் கொள்ளையிட்ட கே.பியும் தக்க தருணத்தில் மகிந்தவிற்காக களம் இறங்க உள்ளார்.

இவர்கள் தைரியமாக வர இருக்கும் காரணம் கூட்டு எதிர்க்கட்சி அவர்கள் அனைவருக்கும் பாதுகாப்பு கொடுக்க தயாராக உள்ள நிலை காணப்படுவதாலே ஆகும்.

இவ்வாறாக நாட்டை இரத்த ஆறாக மாற்றிய கருணா, கே.பி போன்றோரை மகிந்த மேடையேற்றுவதற்கான நோக்கம் ஆட்சியை பிடிப்பதற்காகவே.

அதற்காக நாட்டை சுடுகாடாக்கி , அரச பீடம் அமைத்துக் கொள்வதற்காகவே மகிந்த செயற்பட்டு வருகின்றார். அந்த வகையில் செய் நன்றிக்காகவே கருணாவும் மகிந்த மேடையில் ஏறி உள்ளார்.

மகிந்தவின் அடுத்த திட்டம் மிகவும் பயங்கரமானதாகும் எனவும் கொழும்பு ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.