முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பிரிஜா உரிமையை இரத்துச் செய்யும் எந்த முடிவுகளும் எடுக்கப்படவில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அரசாங்கம் அப்படியான தீர்மானம் ஒன்றை எடுத்திருப்பதாக முன்னெடுக்கப்பட்டு வரும் பிரசாரங்கள் முற்றிலும் பொய்யானது என அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியுள்ளார்.
சுகாதார அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
நீதிமன்றம் சுதந்திரமாக இயங்கி வருகிறது. அதில் தலையிட்டு அழுத்தங்களை கொடுக்கும் எந்த தேவையும் அரசாங்கத்திற்கு இல்லை எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.
மைத்திரி – ரணில் அரசாங்ககம், மகிந்த, விமல் உட்பட கூட்டு எதிர்க்கட்சியின் தலைவர்களை சிறையில் அடைத்து அவர்களின் பிரஜா உரிமையை 7 வருடங்களுக்கு இரத்துச் செய்ய தயாராகி வருவதாக தேசிய சுதந்திர முன்னணியின் அரசியல் சபை உறுப்பினரான நாடாளுமன்ற உறுப்பினர் பத்ம உதயசாந்த குணசேகர கடந்த 31 ஆம் திகதி நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கூறியிருந்தார்.
இரண்டு அல்லது மூன்று வருடங்கள் சிறை தண்டனை அனுபவித்தால் தேர்தலில் போட்டியிட முடியாது. அப்படியானால் சிறையில் அடைக்கப்படுபவர்கள் 2021 அல்லது 2022 ஆம் ஆண்டுதான் விடுதலையாவார்கள்.
இலங்கையின் சட்டப்படி ஒருவர் மூன்று மாதங்கள் சிறை தண்டனை அனுபவித்தால் அவரது பிரஜா உரிமை பறிப்போகும். அப்படியானால் 2020 முதல் 2029 ஆம் ஆண்டு வரை குடியுரிமை இரத்தாகும்.
2025 ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட முடியாது. 2025 ஆம் ஆண்டில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு 82 வயதாகி விடும். 82 வயதில் அவர் எங்கு இருக்க வேண்டும் என்பது எல்லோருக்கும் தெரியும்.
ரணில் விக்ரமசிங்க அவர்களே இதுதான் ஜனநாயகமா?. மகிந்த ராஜபக்ச உட்பட கூட்டு எதிர்க்கட்சியினரை குறைந்தது மூன்று மாதங்களாவது சிறையில் அடைத்து 7 ஆண்டுகளுக்கு பிரஜா உரிமையை இரத்துச் செய்ய முயற்சித்து வருகின்றனர் எனவும் பத்ம உதயசாந்த குணசேகர தெரிவித்துள்ளார்.