அருள் தரும் சந்திர தரிசனம்!!

இறைவனின் படைப்பில் சூரியன் எவ்வாறோ, அதனை ஒத்த பண்பினை உடையது சந்திரன். பகலில் இவ்வுலக உயிர்கள் விழித்து இயங்குவதற்கு தன்னையே எரித்துக் கொண்டு ஒளிர்கின்றான் சூரியன். சூரியனின் இயல்புகளால் உயிர்கள் வாழ்ந்து கொண்டு இருக்கின்றன. அந்த சூரியனின் கதிர்களை உட்கவர்ந்து இரவினில் பிரகாசிக்கின்றான் சந்திரன்.

சந்திரன் மாதத்தில் இருமுறை வேறுபடுகிறது. மாதத்தின் பாதிநாள் பவுர்ணமியாகவும், அடுத்த பாதிநாள் அமாவாசையாகவும் மாறி அழகுற காட்சியளிக்கின்றான். சந்திரன் அமாவாசையை அடுத்து வரும் நாட்களில் வளர்பிறையாக உருவெடுக்கின்றான். இந்த நாளை சந்திர தரிசனம் என்று அழைக்கிறார்கள். இந்த சந்திர தரிசனம் பற்றி இந்து சாஸ்திரம் சொல்வதைப் பார்ப்போம்.

ஒருமுறை முழுமுதற்கடவுள் என்று அழைக்கப்படும் விநாயகப் பெருமான், சிவனின் அதிகாரத்தையும், பொறுப்புகளையும் ஏற்றுக்கொண்டார். புதிய பொறுப்பினை ஏற்றுக்கொண்ட விநாயகர் அனைத்து உலகங்களையும் பார்வையிட சென்றார். எல்லா உலகத்தையும் பார்வையிட்ட விநாயகர் சந்திரனையும் சந்திக்கச் சென்றார். சந்திரன் தான் ஒரு முழுவெண்மதி என்பதால், யானையின் முகத்தை ஒத்த விநாயகரின் திருவுருவை பார்த்து பரிகசித்தான்.

இதனால் கோபமுற்ற விநாயகப்பெருமான் ‘உன் அழகு இன்று முதல் இருண்டு உன்னை உலகத்தார் வணங்க மாட்டார்கள்’ என்று சாபமிட்டார். விநாயகரின் சாபத்தால் சந்திரனின் அழகு குன்றியது. முழு வெண்மதியாக இருந்த சந்திரன் பொலிவிழந்தான். இதனால் கவலை அடைந்த சந்திரன் மனம் வருந்தியதுடன், ஈசனை நோக்கி கடும் தவம் இருந்து பழையபடி முழுவெண்மதியை பெற்றான். சந்திரனின் நிலையை உலகிற்கு உணர்த்தவே மாதத்தின் பாதிநாள் தேய்பிறையாகவும், அடுத்த பாதிநாள் வளர்பிறையாகவும் வலம் வருகின்றான் என்பது நியதி. முழுமதி நாளில் சந்திரனை வழிபட்டால் ‘சந்திர தரிசனம்’ என்பார்கள்.

தான் பெரியவன் என்று நினைப்பது தவறு. அது மிகப்பெரிய அழிவை உணர்த்தும் என்பதை உலகிற்கு உணர்த்தும் விதமாக சந்திரன் காணப்படுகின்றான். இதனால் தான் வளர்பிறையில் எந்த காரியம் தொடங்கினாலும் அந்த காரியம் வளம் பெறும் என்பது ஐதீகம். கோவில்களில் இருக்கும் நவக்கிரகங்களில் உள்ள சந்திரபகவானை மனம் உருகி வழிபட்டால் அவரது திருவருள் கிடைக்கும் என்பது ஐதீகம்.