உலகத்தையே ஆண்டு கொண்டிருப்பவர் சிவபெருமான். அவர் கடைக்கண் பார்வை பட்டால்தான் பக்தர்கள் பிறவிப்பயனைப் பெற முடியும். அத்தகைய அருள் தெய்வமான அண்ணாமலையார் ஆண்டுக்கு ஒரு தடவை பக்தர்களிடம் யாசகம் (பிச்சை) கேட்கும் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
அண்ணாமலையார் ஏன் யாசகம் கேட்க வேண்டும். அதன் பின்னணியில் ஒருகதை உள்ளது.
ஒரு தடவை அண்ணாமலையார் கிரிவலம் சென்றார். அவர் நடந்து கொண்டிருந்த போது, அடர்ந்த காட்டுப் பகுதியில் கொள்ளையர்கள் அவரை வழி மறித்தனர்.
ஈசனின் கிரீடம், நகைகளைப் பறித்துக் கொண்டு அனுப்பி விட்டனர். அனைத்தையும் இழந்து ஈசன் வெறுமனே ஆலயம் திரும்பினார்.
அவரைப் பார்த்த அம்பாள் ‘‘நகைகள் எங்கே?’’ என்று கேட்டார். கொள்ளையர்கள் நகைகளை பறித்து சென்று விட்டதை ஈசன் விளக்கமாக கூறினார்.
அதை ஏற்க மறுத்த அம்பாள், ஆலயத்துக்குள் வருவதாக இருந்தால் நகைகளுடன்தான் திரும்பி வரவேண்டும் என்று உத்தரவிட்டாள். இதைக் கேட்ட ஈசன், ‘‘நகைக்கு நான் எங்கே போவேன்?’’ என்றார்.
உடனே அம்பாள் எங்காவது சென்று யாசகம் எடுக்க வேண்டியது தானே என்றாள். இதையடுத்து அண்ணாமலையார் வெளியில் வந்து பக்தர்களிடம் யாசகம் பெற்றார்.
இந்த வரலாற்று நிகழ்வை பிரதிபலிக்கும் வகையில் அண்ணாமலையார் ஆண்டுக்கு ஒரு தடவை யாசகம் எடுக்கும் நிகழ்ச்சி திருவண்ணாமலையில் நடத்தப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் தீப திருவிழாவின் போது திருவண்ணாமலையில் 10 நாட்கள் விழா நடத்தப்படும். தினமும் காலை, மாலை இரு நேரமும் அண்ணாமலையார் வாகனங்களில் வெவ்வேறு வடிவங்களில் வீதி உலா வருவார்.
இந்த விழாவின் 8-ம் நாளன்று அண்ணாமலையார் பிட்சாடனார் வேடம் ஏற்று யாசகம் கேட்க செல்லும் நிகழ்ச்சி நடத்தப்படும். கிரிவலப் பாதை நெடுக வீதியுலா சென்று அண்ணாமலையார் யாசகம் கேட்பார்.
பக்தர்கள் அன்று போட்டி போட்டு அவருக்கு பிச்சையை காணிக்கையாகப் போடுவார்கள். திருவண்ணாமலையில் உள்ள பல கடைக்காரர்கள் 8-ந் திருநாளன்று வசூலாகும் மொத்த பணத்தையும் அண்ணாமலையார் எடுக்கும் யாசகத்துக்கு கொடுத்து விடுவார்கள்.
கடவுளே வீதிக்கு வந்து பக்தனிடம் பிச்சை கேட்பது என்பது, தமிழ்நாட்டில் வேறு எந்த தலத்திலும் இல்லாதபடி திருவண்ணாமலையில் மட்டுமே நடக்கும் அதிசய நிகழ்வாக உள்ளது.
அண்ணாமலையார் யாசகம் கேட்பதை யாரால்தான் பொறுத்துக் கொள்ள முடியும்? எனவே பெண் பக்தர்கள் அண்ணாமலையார் சார்பில் தங்கள் முந்தானையை ஏந்தி ஓடி, ஓடி சென்று பிச்சை எடுத்து வந்து அண்ணாமலையாரிடம் கொடுப்பார்கள். குறிப்பாக நகரத்தார் பெண்கள் அதிக அளவில் திரண்டு வந்து அண்ணாமலை யாருக்காக தாங்களே பிச்சை எடுப்பதுண்டு. ஆண்டுக்கு ஒரு தடவை நடக்கும் இந்த அதிசயத்தை நீங்கள் பார்க்க வேண்டுமானால் தீப திருவிழாவின் 8-ம் நாள் விழா தினத்தன்று சென்றால் பார்க்கலாம்.