‘பயங்கரவாதிகள்’ என்ற சொல்லைப் பயன்படுத்தவேண்டாம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா விடுத்த கோரிக்கையை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உதாசீனம் செய்துள்ளார்.
கொழும்பு, காலிமுகத்திடலில் நேற்று நடைபெற்ற அரசின் சுதந்திர தின நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,
“சுதந்திரம் பற்றிப் பேசுகின்றபோது முப்பது வருடத்திற்கும் மேலாக எமது நாட்டை எல்.ரி.ரி.ஈ. பயங்கரவாதிகளிடமிருந்து விடுவிப்பதற்காகப் போராடிய வீரர்களை நினைவுகூர்வது முக்கியமானதாகும்” என்றார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 31ஆம் திகதி மாவிட்டபுரத்தில் நடைபெற்ற,
‘நல்லிணக்கபுரம்’ வீடுகள் கையளிப்பு நிகழ்வில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்பாகப் பேசும் போது, இந்த நாட்டின் அரசியல் தலைவர்கள், இராணுவத்தினர் உள்ளிட்டோர் மீண்டும் மீண்டும் பயங்கரவாதம் என்ற சொல்லை உச்சரிக்காமல் இருப்பது நல்லது என்று கூறிக் கொள்ள விரும்புகின்றேன்.
எங்களைத் தோற்கடித்துவிட்டோம் என்று சொல்லுகின்ற வார்த்தைகளைப் பயன்படுத்தவேண்டாம் என்பதை இதயபூர்வமாக உங்களிடம் கேட்டுக் கொள்கின்றேன்” என்று தெரிவித்திருந்தார்.
அன்றைய நிகழ்வில் மாவை சேனாதிராஜாவின் உரையைத் தொடர்ந்து பேசிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, “போர்க்காலத்தில் அரச தரப்பும், அதற்கு எதிரானவர்களும் ஆயுதம் ஏந்திப் போராடினார்கள்” என்று குறிப்பிட்டிருந்தார். ‘பயங்கரவாதிகள்’ என்ற வார்த்தையைத் தவிர்த்திருந்தார்.
மூன்று மாதங்களின் பின்னர், ஜனாதிபதி மைத்திரிபால ‘பயங்கரவாதிகள்’ என்று குறிப்பிட்டு உரையாற்றியுள்ளார்.