தமிழகத்தின் 3-வது பெண் முதல்வராகிறார் சசிகலா!

ஜானகி ராமச்சந்திரன், ஜெயலலிதாவுக்கு அடுத்து தமிழகத்தின் மூன்றாவது பெண் முதல்வராக சசிகலா பதவியேற்க உள்ளார்.

முதல் பெண் முதல்வர் ஜானகி ராமச்சந்திரன்

அதிமுகவின் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான எம்.ஜி.ஆர். 1987, டிசம்பர் 24 அன்று மரணமடைந்தார். அதைத் தொடர்ந்து அதிமுக இரண்டாக உடைந்தது.

முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் துணைவி ஜானகி ராமச்சந்திரன் 1988-ம் ஆண்டு ஜனவரி 7-ம் திகதி தமிழக முதல்வர் ஆனார்.

ஆனால், சட்டப்பேரவையில் தன் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க முடியாததால் 1988-ம் ஆண்டு ஜனவரி 30-ம் திகதி ஆட்சிப் பொறுப்பை இழந்தார். 23 நாட்கள் மட்டுமே ஜானகி ராமச்சந்திரன் முதல்வர் பதவியில் இருந்தார்.

ஆறு முறை முதல்வராக பதவி வகித்தவர் ஜெயலலிதா

எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு அதிமுக இரண்டாக உடைந்தது. எம்ஜிஆரின் மனைவி ஜானகி தலைமையில் ஓர் அணி , ஜெயலலிதா தலைமையில் ஓர் அணி என இரண்டு அணிகள் ஏற்பட்டன.

1988, ஜனவரி 1-ம் திகதி அதிமுக (ஜெ) அணிக்கு பொதுச் செயலாளராக ஜெயலலிதா பொறுப்பேற்றார்.

1989, ஜனவரி 24-ம் திகதி, தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலை அடுத்து மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.

போடி நாயக்கனூர் சட்டமன்றத் தொகுதியில் நின்று சட்டசபை உறுப்பினர் ஆனார் ஜெயலலிதா. அவர் தலைமையிலான அணி 27 இடங்களைப் பெற்று எதிர்க்கட்சி ஆனது.

1989, பிப்ரவரி 9-ம் தேதி தமிழகத்தின் முதல் பெண் எதிர்க்கட்சித் தலைவர் ஆனார். இரண்டு அணிகளாக இருந்த அதிமுகவை ஒன்று சேர்த்து இரட்டை இலை சின்னத்தையும் மீட்டார்.

அதே ஆண்டு நவம்பர் மாதம் வந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்திலும் புதுச்சேரியிலும் அதிமுக காங்கிரஸ் கூட்டணி 40 இடங்களில் 39 இடங்களை வென்றது. இதன் மூலம் ஜெயலலிதா தேசிய அரசியலில் நுழைந்தார்.

1991-ல் சென்னைக்கு அருகே ஸ்ரீபெரும்புதூரில், ராஜீவ் காந்தி படுகொலையைத் தொடர்ந்து நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக, காங்கிரஸ் கூட்டணி, 234 தொகுதிகளில் 224-ஐ வென்றது. 39 நாடாளுமன்றத் தொகுதிகளை இக்கூட்டணி கைப்பற்றியது.

அதிகபட்ச பெரும்பான்மையுடன் ஜெயலலிதா, தமிழகத்தின் முதல்வர் ஆனார். அதிகபட்ச பெண் சட்டமன்ற உறுப்பினர்கள் (25) இடம்பெற்ற சட்டசபையாகவும் அது அமைந்தது.

தமிழகத்தின் முதல்வராக ஆறு முறை பதவி வகித்தவர் ஜெ.ஜெயலலிதா. அவர் மாநில அரசியல் மட்டுமின்றி தேசிய அளவிலும் தாக்கம் செலுத்தும் தலைவர்களில் ஒருவராக விளங்கியவர்.

2016-ம் ஆண்டு செப்டம்பர் 22-ம் திகதி, காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்துக் குறைபாடு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

டிசம்பர் 5-ம் திகதி, 75 நாட்கள் மருத்துவமனையில் இருந்த அவர் மாரடைப்பு காரணமாக நள்ளிரவு 11.30 மணிக்குக் காலமானார்.

janaki

புதிய முதல்வர் சசிகலா

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அவரின் தோழியான சசிகலா கடந்த டிசம்பர் 29-ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் கட்சியின் அடுத்த பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.

இடையிடையே சில மாதங்கள் தவிர, கடந்த 33 ஆண்டுகளாக ஜெயலலிதாவின் நிழலாக அவரது போயஸ் தோட்ட இல்லத்திலேயே வசித்து வந்தவர் சசிகலா.

தலைமைச் செயலகம் தவிர ஜெயலலிதா எங்கு சென்றாலும் அவரது காரின் பின் இருக்கையில் சசிகலா கட்டாயம் இருப்பார்.

ஜெயலலிதாவுக்கு உணவு வழங்குதல், அவருக்கு தேவையான வற்றை எடுத்து கொடுத்தல், பிரச்சாரத் துக்கான உரைகளை எடுத்துக் கொடுத்தல் என எல்லாமே சசிகலாதான்.

33 ஆண்டுகளாக ஜெயலலிதாவை விட்டு நீங்காமல், அவரது நிழல்போல உடனிருந்த, பின்னால் இருந்த சசிகலா தற்போது, ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு முன்னுக்கு, முகப்புக்கு வரத் தொடங்கி இருக்கிறார்.

டிசம்பர் 31-ல் அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா பொறுப்பேற்றுக்கொண்டார். முதல்வர் பொறுப்பையும் சசிகலா ஏற்க வேண்டும் என சில அமைச்சர்களும், அதிமுக நிர்வாகிகளும் வெளிப்படையாகவே கோரிக்கை வைத்து வந்தனர்.

கட்சியும், ஆட்சியும் ஒருவரிடம் இருக்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி, சசிகலாவை முதல்வராக்கும் முயற்சி நடந்தது. அமைச்சர்கள் சிலரே அதற்கு அடித்தளம் இட்டனர்.

இந்நிலையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

அதிமுக சட்டப்பேரவை குழு தலைவராக வி.கே.சசிகலாவை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முன்மொழிந்தார். அதை அதிமுகவின் எம்.எல்.ஏக்கள் வழிமொழிந்தனர்.

அதிமுக சட்டப்பேரவை குழு தலைவராக தேர்வு செய்யப்பட்ட சசிகலா, விரைவில் முதல்வராக பொறுப்பேற்க உள்ளார்.

பிப்ரவரி 7 அல்லது 9-ம் திகதி சசிகலா முதல்வராக பதவியேற்பார் என்று கூறப்படுகிறது.