நந்தினி கொலை வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்ற வேண்டும்: மு.க.ஸ்டாலின்

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள கடிதம் வடிவிலான அறிக்கையில் கூறியிருப்பதாவது,

பெண்களுக்கு பாதுகாப்பற்ற மாநிலமாக தமிழகம் மாறிக் கொண்டிருக்கிறதோ என்ற அச்சத்தை அதிகப்படுத்தியுள்ளது அரியலூர் மாவட்டதைச் சேர்ந்த நந்தினிக்கு ஏற்பட்ட பாலியல் கொடூர மரணம். அரியலூர் அருகேயுள்ள சிறுகடம்பூரைச் சேர்ந்த 16 வயது பெண் நந்தினி, தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்.

கடந்த ஆண்டு டிசம்பர் 26-ந் தேதி நந்தினி காணாமல் போனது குறித்து அவரது பெற்றோரால் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் இந்தப் புகாரை அலட்சியப்படுத்தி வந்தனர்.

இந்தநிலையில் தான், ஜனவரி 14-ந் தேதி கீழமாளிகை கிராமத்தில் ஒரு கிணற்றிலிருந்து மோசமான நிலையில் நந்தினியின் சடலம் மீட்கப்பட்டது. அவரைக் கொலை செய்தவர்கள் யார்? என்ற விசாரணையில், சிறுகடம்பூர் கிராமத்தைச் சேர்ந்த இந்து முன்னணி அமைப்பின் பிரமுகரான மணிகண்டன் என்பவர் தனது நண்பர்களுடன் இணைந்து நந்தினியை கொலை செய்து கிணற்றில் வீசியது தெரிய வந்தது.

இதனைத் தொடர்ந்து மணிகண்டனும் அவனது நண்பர்களும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் மணிகண்டன் மீது குண்டர் சட்டமும் பாய்ந்திருக்கிறது. தமிழகத்தில் சட்டம்ஒழுங்கு எந்த லட்சணத்தில் இருக்கிறது என்பதற்கு நந்தினிக்கு நேர்ந்த கொடூரமும் அதன் விளைவாக அவர் கொலையானதுமே சாட்சியமாகும்.

ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்தபோது, பெண்களின் பாதுகாப்புக்காக “13 அம்சங்கள் கொண்ட” சிறப்பு திட்டத்தை அறிவித்தார். அ.தி.மு.க அரசில் அறிவிக்கப்படுபவை எல்லாம் 110-விதியின் கீழான அறிவிப்புகள் போல செயலுக்கு வராமல் முடங்கிப்போவது வழக்கம்தானே! பெண்கள் பாதுகாப்பு குறித்த திட்டமும் அப்படித்தான் ஆனது.

வேலை பார்க்கும் மகளிருக்கான விடுதிகளில் பாதுகாப்பு அதிகரிப்பு, பொது இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் போன்ற அந்த அறிக்கையில் இருந்த அடிப்படையான அம்சங்களைக் கூட அ.தி.மு.க அரசு முழுமையாக நிறைவேற்றவில்லை. பாலியல் குற்றத்துக்கான கடும் தண்டனைகள் என்ற அறிவிப்பும் காற்றோடு போய்விட்டது.

1996-2001 தலைவர் கருணாநிதி ஆட்சிக்காலத்தில், சென்னை எத்திராஜ் கல்லூரி மாணவி சரிகாஷா என்பவர் சில இளைஞர்களால் ஈவ்டீசிங்குக்கு உள்ளாக்கப்பட்டு, விபத்துக்குள்ளாகி மரணமடைந்த போது, அது குறித்து முழுமையான விசாரணைக்கு உத்தரவிட்ட அன்றைய முதல்வர் கருணாநிதி, ஈவ்டீசிங் தடுப்பு சட்டத்தையும் நிறைவேற்றி, குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை கிடைக்கச் செய்தார். அந்த சட்டத்தை சரியான முறையில் நடைமுறைப்படுத்தி, ஈவ்டீசிங் கொடுமையைக் கட்டுப்படுத்தினார். இந்த சட்டம் உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த நீதிபதி சந்துரு போன்றவர்களின் பாராட்டைப் பெற்றது.

பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்தது தி.மு.க. அரசு. ஆனால், பெண்கள் மீதான வன்முறையும் பாலியல் தொல்லைகளும் படுகொலைகளும் அதிகரிக்கும் நிலையை உருவாக்கியுள்ளது அ.தி.மு.க அரசு. அதன் விளைவு தான், அரியலூர் மாவட்டம் சிறுகடம்பூர் நந்தினிக்கு ஏற்பட்டுள்ள கொடூரம். இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று கோரி வருகின்ற 10-ம் தேதி அரியலூர் தி.மு.க. சார்பில் மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடத்தப்படும்.

நான்(மு.க.ஸ்டாலின்) நேரடியாகச் சென்று நந்தினியின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறி விட்டு உரிய நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் நீதிமன்றத்தை நாடுவோம் என்று உறுதி அளித்து விட்டு வந்தேன். ஆகவே தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த அந்தப் பெண்ணுக்கு நேர்ந்த அவலத்திற்கு காரணமானவர்கள் எத்தகைய அரசியல் பின்னணி கொண்டவர்களாக இருந்தாலும் அவர்கள் மீது சட்டரீதியான கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என நம்புகிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.