ஆப்கானிஸ்தானில் பனிச்சரிவில் சிக்கி 100 பேர் பலி!!

ஆப்கானிஸ்தானில் கடந்த 3 நாட்களாக கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இதில் மிகவும் உள்ளடங்கிய பகுதியான நூரிஸ்தான் மாகாணம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இங்கு தொடர்ந்து பனிச் சரிவுகள் ஏற்படுகின்றன. அதன் இடிபாடுகள் வீடுகளின் மீது சரிகின்றன. இதனால் வீடுகள் பனிக்கட்டிக்குள் மூழ்கி கிடக்கின்றன. ரோடுகளும் அடைபட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

இங்குள்ள பர்க்மடல் மாவட்டத்தில் கிராமங்கள் முழுவதும் பனிக்கட்டிக்குள் மூழ்கி கிடக்கின்றன. இவை தவிர வடக்கு மற்றும் மத்திய ஆப்கானிஸ்தான் மாகாணங்கள் பனிச் சரிவினால் பாதிக்கப்பட்டுள்ளது.

பனிச்சரிவில் சிக்கி இதுவரை 100-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். அவர்களில் 50 பேர் நூரிஸ் தான் மாகாணம் பர்க்மால் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர்கள்.

வடகிழக்கில் உள்ள படாக்ஷான் மாகாணத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் 3 பெண்கள், 2 குழந்தைகள் அடங்குவர். இவர்களது வீடு பனிக்கட்டிக்குள் சிக்கி அழிந்து விட்டது.

இன்னும் ஏராளமானோர் பனிக்கட்டிக்குள் சிக்கி தவிக்கின்றனர். எனவே, மீட்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.