இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவர் ரோகித்சர்மா.
நியூசிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் அவர் காயம் அடைந்தார். தொடை பகுதியில் ஏற்பட்ட காயத்துக்காக ரோகித்சர்மா லண்டனில் ஆபரேசன் செய்து கொண்டார்.
இதன் காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட், ஒருநாள் தொடர் மற்றும் 20 ஓவர் போட்டியில் அவர் விளையாடவில்லை. இதேபோல வங்காளதேச அணிக்கு எதிரான டெஸ்டிலும் இடம் பெறவில்லை.
இந்த நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடுவேன் என்று ரோகித்சர்மா நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
ஆபரேசனுக்கு பிறகு நான் வேகமாக குணமடைந்து வருகிறேன். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடம் பெற முயற்சி செய்வேன். இந்த தொடரில் விளையாட நான் மிகுந்த ஆர்வத்துடன் இருக்கிறேன். தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு (என்.சி.ஏ) சென்று எனது உடல் தகுதி குறித்து ஆலோசனை பெறுவேன்.
எந்த தேதியில் அணிக்கு திரும்புவேன் என்பதை என்னால் உறுதியாக சொல்ல இயலாது. ஆனால் ஆஸ்திரேலியா தொடரில் விளையாட கண்டிப்பாக முயற்சி செய்வேன்.
காயம் என்பது ஆட்டத்தின் ஒரு பகுதியாகும் நீண்ட காலம் அதில் இருந்து தவிர்க்க இயலாது.
இவ்வாறு ரோகித்சர்மா கூறியுள்ளார்.
29 வயதான அவர் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் முத்திரை பதிக்கும் வகையில் ஆடி இருந்தார்.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 4 டெஸ்டில் விளையாடுவதற்காக இந்தியா வருகிறது. இதன் முதல் டெஸ்ட் வருகிற 23-ந்தேதி புனேயில் தொடங்குகிறது.