இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் சவாலானது: சகீப்அல்-ஹசன்

வங்காளதேச கிரிக்கெட் அணி ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது.

அந்த அணி தற்போது இந்திய ‘ஏ’ அணியுடன் பயிற்சி ஆட்டத்தில் விளையாடி வருகிறது. இந்தியா – வங்காளதேசம் அணிகள் மோதும் டெஸ்ட் போட்டி வருகிற 9-ந்தேதி ஐதராபாத்தில் தொடங்குகிறது.

இந்த டெஸ்ட் போட்டி குறித்து வங்காளதேச அணியின் ஆல்ரவுண்டர் சகீப் அல்-ஹசன் கூறியதாவது:-

இந்தியாவுக்கு எதிராக இந்திய மண்ணில் முதல் முறையாக டெஸ்டில் ஆடுவது மிகவும் சிறப்பானது. இந்தியா டெஸ்டில் நம்பர் ஒன் அணியாக திகழ்கிறது. அந்த அணியை வீழ்த்துவது என்பது மிகவும் சவாலானது. இந்த டெஸ்ட் எங்களுக்கு கடினமாக இருக்கும்.

ஆனால் நாங்கள் சிறப்பாக விளையாடி சவாலை சந்திக்கும் ஆர்வத்துடன் இருக்கிறோம்.

அஸ்வினின் பந்து வீச்சு எங்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும். மிகவும் சிறந்த பவுலரான அவர் உலகின் தலை சிறந்தவராக திகழ்கிறார். கடந்த 2 ஆண்டுகளாக அவர் மிகவும் அபாரமாக பந்து வீசி வருகிறார். நேர்த்தியாக வீசுவதில் வல்லவர்.

வீராட்கோலி கிரிக்கெட்டின் அனைத்து நிலைகளிலும் சிறப்பாக ஆடுகிறார். அவரை தடுத்து நிறுத்துவது கடினம்.

எங்கள் அணியின் முன்னணி வேகப்பந்து வீரர் முஸ்டாபிசுர் ரகுமான் காயம் காரணமாக இடம் பெறவில்லை. இந்தியாவை வீழ்த்த வீரர்கள் அனைவரும் கூட்டு முயற்சியுடன் திறமையை வெளிப்படுத்துவது அவசியமானது.

ஐ.பி.எல். போட்டியின் விளையாடிய அனுபவம் கை கொடுக்கும். எங்கள் அணியில் உள்ள இளம் வீரர்கள் சிறப்பாக செயல்படுவார்கள்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.