இந்தியா – வங்காள தேச அணிகளுக்கு இடையிலான ஒரேயொரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் 9-ந்தேதி ஐதராபாத்தில் தொடங்குகிறது. நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் இந்தியா வங்காள தேசத்தை குறைத்து மதிப்பிடாது என்று சகா கூறியுள்ளார்.
இந்திய டெஸ்ட் அணியின் விக்கெட் கீப்பரான சகா, வங்காள தேசத்திற்கு எதிரான டெஸ்ட் போட்டி குறித்து கூறுகையில் ‘‘ஐ.சி.சி.யின் டெஸ்ட் அணிகள் தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கும் நாங்கள் அவர்களை எளிதான அணியாக நினைக்கலாம் என்று கூறப்படலாம். ஆனால், மைதானத்தில் அவர்களை எதிர்கொள்வதற்கு முன்னாள் குறைத்து மதிப்பிடமாட்டோம். போட்டி நடைபெறும் அந்த நாளின் சூழ்நிலையை பொறுத்து இருக்கிறது. சூழ்நிலையை பொறுத்து நாங்கள் செயல்படுவோம்.
ஒவ்வொருவரும் மைதானத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த விரும்புவார்கள். நாம் என்ன நினைக்கிறமோ, அதை சில சமயங்களில் செயல்படுத்த முடியாமல் போகலாம். இது உங்களது சிந்தனைகளை நல்ல ஆட்டத்திறனாக மாற்றுவதில் இருக்கிறது.
ஆஸ்திரேலியா அணி இந்தியா எப்போது வருகிறது என்பது பற்றி எனக்குத் தெரியாது. ஆனால், தற்போது வங்காள தேச டெஸ்ட் மீதுதான் எனது கவனம் இருக்கிறது. அவர்கள் இந்தியா வந்த பிறகு நாங்கள் அவர்களை பற்றி சிந்திப்போம்’’ என்றார்.