சர்வதேச ரீதியில் பாரியளவிலான போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள, போதைப் பொருள் மன்னனாக கருதப்படும் நோர்வே நாட்டவரான ஜர்மன்ட் கெபலன்ட் எனும் பெயரையுடையவர்,இலங்கைக்கு வருகைத்தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவர் எமது நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக வெளியான சர்வதேச தகவல்களையடுத்து பொலிஸார் விசாரணைகளை முடுக்கி விட்டுள்ளனர்.
மாலைத்தீவிலிருந்து கடந்த சில தினங்களுக்கு முன்னர் இவர் இலங்கை வந்துள்ளதாக சில சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
குறித்த நபர் ஹஷீஸ் எனும் பெயரையுடைய போதைப் பொருள் விற்பனை வலையமைப்புடன் தொடர்புடைய ஒருவர் எனவும் குறிப்பிடப்படுகின்றது.
இது தொடர்பில், பொலிஸ் போதை ஒழிப்பு பிரிவின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில், இவரது வருகை தொடர்பில் தனக்கும் தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும், விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
இருப்பினும், இதுவரையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், ஜர்மன்ட் என்பவர் இலங்கை வந்தமைக்கான ஆதரங்கள் எதுவும் ஊர்ஜீதப்படுத்தப்படவில்லை. இது தொடர்பில், சார்க் நாடுகளின் போதைப் பொருள் வர்த்தக தவிர்ப்பு பிரிவுடன் தொடர்பு கொண்டு அறிவித்தல் வழங்கியுள்ளதாகவும் பொலிஸ் சிரேஷ்ட பேச்சாளர் மேலும் கூறியுள்ளார்.