மஹிந்த, கோத்தா மீண்டும் அரசியலுக்கு வர பாலம் அமைப்பவரா வடக்கு முதல்வர்!

நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பல முயற்சிகளை முன்னெடுத்துள்ள போதும் இவற்றுக்கு வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரன் முட்டுக்கட்டை போடும் செயற்பாடுகளை முன்னெடுப்பதாக இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

வடக்கு முதலமைச்சருக்கும் தயாசிறி ஜயசேகரவுக்கும் இடையில் ஏற்பட்ட முன்னுக்குப் பின் முரணான கருத்துக்கள் தொடர்பில் பேசும் போதே இதை கூறினார். தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,

வடக்கு முதலமைச்சரிடம் ஒரு கோரிக்கையை முன்வைக்கின்றோம். அதாவது தெற்கிலிருக்கும் இனவாதிகளை ஊக்கப்படுத்தும் செயற்பாடுகளை நிறுத்திக்கொள்ள வேண்டும்.

அவ்வாறு நிறுத்தாவிடின் அதிகாரப்பகிர்வுக்கு நாம் கொடுக்கும் ஆதரவையும் நிறுத்திக்கொள்ள வேண்டிவரும் என தெரிவித்தார்.

மஹிந்த ராஜபக்ஸவையும், கோத்தபாய ராஜபக்ஸவையும் மீண்டும் ஆட்சிக்கு கொண்டுவருவதற்காகவா வடக்கு முதல்வர் இவ்வாறு செயற்படுகின்றார் என்ற பகிரங்க கேள்வியை முன்வைப்பதாகவும் குறிப்பிட்டார்.

விக்கினேஸ்வரனின் செயற்பாடுகள் இதை நோக்கமாக கொண்டதாகவே காணப்படுவதாகவும் இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.