அதிமுக பொதுச்செயலாளரான சசிகலா, முதலமைச்சராக பொறுப்பேற்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. சசிகலா முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டது குறித்து பல்வேறு தலைவர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இந்நிலையில், நடிகரும், லட்சிய திமுக தலைவருமான டி.ராஜேந்தர் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
சசிகலா அவசர அவசரமாக முதல்வராவதற்கு அவசியம் என்ன? இதனால், சசிகலா மீது சிலர் வெறுப்பு கொள்ளும் நிலை ஏற்பட்டிருக்கிறது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, மக்களால் நான், மக்களுக்காக நான் என்று கூறிவந்தார். அவர் தனக்கு யாரும் சொந்தம் இல்லை என்றுதான் சொன்னார்.
ஆனால், அவர் மறைந்த பிறகு சசிகலா போயஸ் தோட்டத்தில் யாரை சொந்தம் கொண்டாடிக் கொண்டு இருக்கிறார். போயஸ் தோட்டத்தில் இவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது? இவர்கள் உரிமை கொண்டாடுவது என்ன நியாயம்?
இவ்வாறு அவர் பேசினார்.