பீஷ்மரின் வேதனை போக்கிய எருக்க இலை!

பாண்டவர்களுக்கும், கவுரவர்களுக்குமான மகாபாரத போர் உச்சத்தை எட்டியிருந்தது. பீஷ்மர் போரில் வீழ்த்தப்பட்டு குற்றுயிராக கிடந்தார். பீஷ்மர் நினைக்கும்போதுதான் அவர் உயிர் பிரியும் என்ற வரத்தின் காரணமாக, அவர் உயிர் ஊசலாடிக்கொண்டு இருந்தது. போரின் முடிவைப் பார்க்கும் எண்ணத்தில் அவரும் தன் உயிரை கையில் பிடித்துக் கொண்டு காத்திருந்தார். அவருக்காக அர்ச்சுனன் ஓர் அம்பு படுக்கையை தயார் செய்து கொடுத்தான். நீர் அருந்துவதற்காக தரையில் ஒரு அம்பை எய்து, நீர் வரச் செய்தான். இருப்பினும் பீஷ்மரால் வலியின் வேதனையை தாங்க முடியவில்லை. காலம் சென்று கொண்டே இருந்தது. பலர் வந்து பார்த்துச் சென்றனர்.

வியாசரும், பீஷ்மரை பார்ப்பதற்காக வந்திருந்தார். அவரிடம், ‘நான் என்ன பாவம் செய்தேன். நான் விரும்பும் வேளையில் என் உயிர் போகும் என்ற வரத்தை பெற்றதால் இந்த வேதனையை அடைகிறேன். இதற்கு என்ன காரணம்?’ என்று கேட்டார் பீஷ்மர்.

அதற்கு வியாசர் ஒருவர் தன் மனம், மொழி, உடலால் செய்யும் தீமைகள் மட்டுமே பாவம் என்று எடுத்துக்கொள்ளப்படமாட்டாது. பிறர் செய்யும் தீமைகளை தடுக்காமல் இருப்பதும் கூட ஒரு வகையில் பாவம் செய்த கணக்குதான்’ என்றார்.

வியாசர் அப்படிச் சொன்னதும் தான் பீஷ்மருக்கு பழைய நிகழ்வுகள், நினைவுக்கு வந்தது. பல குருமார்களும், அமைச்சர்களும் கூடியிருந்த சபையின் நடுவே, பாஞ்சாலியின் ஆடைகளை துச்சாதனன் துகில் உரித்த போது, அதை தடுக்காமல் வேடிக்கைப் பார்த்த தன்னுடைய செயலை எண்ணி பீஷ்மர் வருந்தினார்.

‘வியாசரே! நான் செய்த அந்தப் பாவத்திற்கு விமோசனம் என்பதே இல்லையா?’ என்று கேட்டார் பீஷ்மர்.

‘நீங்கள் எப்போது உங்கள் பாவத்தை உணர்ந்தீர்களோ, அப்போதே அந்த பாவம் அகன்று விட்டது. இருப்பினும் கண்டும், காணாமல் இருந்த கண்கள், செவி, வாய், தோள், கைகள், புத்தி உள்ள தலை ஆகியவை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்பது விதி’ என்றார் வியாசர்.

அதன்படியே அவரது உடலின் பாகங்கள் அனைத்தும் துன்பத்தை அனுபவித்துக் கொண்டிருந்தன. சூரியனின் வெப்பம் அவரது உடலை நெருப்பைப் போல் சுட்டுப் பொசுக்கிக் கொண்டிருந்தது. இதுபற்றி பீஷ்மர், வியாசரிடம் கூறினார்.

உடனே வியாசர், ‘எருக்க இலை சூரியனுக்கு உகந்தது. சூரியனின் சாரம் அதில் உள்ளது. எனவே அந்த இலைகளால் உங்களின் அங்கங்களை அலங்கரிக்கிறேன்’ என்று கூறியபடி அங்கிருந்த எருக்கம் செடியில் இருந்து இலைகளைப் பறித்து பீஷ்மரின் உடலை அலங்கரித்தார். இதையடுத்து அவரது உடலில் இருந்த எரிச்சல் நீங்கி அமைதியானார். பின்னர் தியானத்தில் ஆழ்ந்திருந்து ஒரு ஏகாதசி தினத்தில் தன்னுடைய உயிரை நீத்தார்.

இந்த நிலையில் பீஷ்மருக்கு இறுதிச் சடங்கு செய்ய யாரும் இல்லாததை எண்ணி, தர்மர் வருத்தம் கொண்டார். இதுபற்றி தர்மர், வியாசரிடம் கூறினார்.

‘நீ எதற்கும் கவலைப்படாதே தருமனே!. சூரியனுக்காக எருக்க இலை சூடி விரதம் இருக்கும் ரத சப்தமி நாளில், நாடு முழுவதும் உள்ள மக்கள் அனைவரும் பீஷ்மருக்கு நீர்க்கடன் செலுத்துவார்கள்’ என்று ஆறுதல் கூறினார்.

அதன்படியே ரத சப்தமி நாளில் எருக்க இலைகளை, ஆண்களும், பெண்களும் தங்கள் உடலில் பல்வேறு அங்கங்களில் வைத்துக் கொண்டு குளிக்கும் பழக்கம் வந்ததாக கூறப்படுகிறது. இவ்வாறு குளிக்கும் மக்கள் தங்கள் பாவங்களில் இருந்து விடுபடுவதுடன், பீஷ்மருக்கு நீர்கடன் அளித்த புண்ணி யத்தையும் பெறுகிறார்கள்.