தீவிரவாத தாக்குதல்கள் நிகழ்ந்தால் நீதிமன்றமே பொறுப்பு : அதிபர் டிரம்ப்

அமெரிக்க அதிபராக சமீபத்தில் பொறுப்பேற்ற டொனால்டு டிரம்ப், 7 இஸ்லாமிய நாடுகளை சேர்ந்தவர்கள்  3 மாத காலம் அமெரிக்காவில் நுழைய தடை விதித்து கடந்த வாரம் அதிரடியாக உத்தரவிட்டார். இதனால் அந்த நாடுகளை சேர்ந்த 60 ஆயிரம் பேரின் விசாக்கள் ரத்தாகின.
உலகமெங்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த உத்தரவை எதிர்த்து வாஷிங்டன், நியூயார்க் உள்ளிட்ட அமெரிக்க நகரங்களில் மட்டுமல்லாது, லண்டன், பாரீஸ் என பிற நாட்டு நகரங்களிலும் நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. தொடர்ந்து ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இதற்கு இடையே டிரம்பின் உத்தரவை எதிர்த்து சியாட்டில் கோர்ட்டில் ஒரு வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜேம்ஸ் ராபர்ட், டிரம்ப் பிறப்பித்த உத்தரவுக்கு நாடு முழுவதும் தற்காலிக தடை விதித்தார்.
நீதிமன்ற உத்தரவு குறித்து கடுமையாக விமர்சித்துள்ள டொனால்டு டிரம்ப், தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது:-
நமது நாட்டை நீதித்துறை ஆபத்தில் சிக்க வைத்துள்ளதை என்னால் நம்ப முடியவில்லை. அமெரிக்காவின் பாதுகாப்புக்கு ஏதெனும் நேர்ந்தால் அதற்கு நீதித்துறையே பொறுப்பு. நீதித்துறை தடை உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் அமெரிக்கா வருபவர்களை உள்நாட்டு பாதுகாப்பு அதிகாரிகள் மிகக் கவனமாக பரிசோதிக்க வேண்டும். நீதிமன்றம் நமது பணியை மேலும் கடினமாக்கியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.