சிரியாவை ஒட்டிய துருக்கி நாட்டிலும் ஐஎஸ் தீவிரவாத அமைப்பு வலுவாக காலூன்ற ஆரம்பித்துள்ளது. அந்நாட்டில் கடந்தாண்டு பல்வேறு குண்டுவெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்தன. இதற்கு ஐஎஸ் அமைப்பு காரணமாக இருக்கலாம் என குற்றம்சாட்டப்பட்டாலும், அந்த அமைப்பு பொறுப்பேற்கவில்லை.
இதற்கிடையே, தலைநகர் இஸ்தான்புல்லில் புத்தாண்டு இரவு, விடுதி ஒன்றில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த 39 பேரை தீவிரவாதி சுட்டுக் கொன்றான். முதல் முறையாக இதற்கு ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றது.
இதேபோல, மேலும் பல நாச வேலைகளில் ஈடுபட ஐஎஸ் அமைப்பு தயாராகி வருவதாக உளவுத்துறைக்கு தகவல்கள் கிடைத்தது. அதன் அடிப்படையில், நேற்று ஒரே நாளில் நாடு முழுவதும் போலீசார் அதிரடி வேட்டையில் ஈடுபட்டனர். இதில், 400 ஐஎஸ் ஆதரவாளர்கள் பிடிபட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானோர் வெளிநாட்டைச் சேர்ந்தவர்களாவர். அதிகபட்சமாக, சிரியா எல்லையை ஒட்டிய சன்லியுர்பா நகரில் 150 பேரும், காஜியன்டேப் நகரில் 47 பேரும் சிக்கினர். தலைநகர் அங்காராவின் 4 மாவட்டங்களில் 60 பேர் பிடிபட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் வெளிநாட்டவர்கள். இதுதவிர, சந்தேகத்திற்கு இடமான 10 குழந்தைகள் உட்பட 14 வெளிநாட்டவர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர். ஒரே நாளில் 400 ஐஎஸ் ஆதரவாளர்கள் சிக்கியிருப்பது துருக்கியில் பதற்றத்தை அதிகரித்துள்ளது.