ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் ஏலத்தில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மா உள்பட 7 வீரர்களின் அடிப்படை விலை ரூ.2 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
10-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இந்தியாவில் ஏப்ரல் 6-ந் தேதி தொடங்குகிறது. இந்த போட்டிக்கான வீரர்கள் ஏலம் பெங்களூருவில் வருகிற 20-ந் தேதி நடக்கிறது.
ஐ.பி.எல். போட்டிக்கான ஏலத்தில் பங்கேற்க மொத்தம் 799 வீரர்கள் தங்கள் பெயர்களை பதிவு செய்து இருந்தனர். 8 அணிகளும் தங்களுக்கு விருப்பமான வீரர்களின் பெயர் பட்டியலை தாக்கல் செய்துள்ளனர். இதில் எந்த அணிகளும் விரும்பி கேட்கப்படாத 8 நாடுகளை சேர்ந்த 160 வீரர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. தற்போது 639 வீரர்கள் பட்டியலில் உள்ளனர்.
இந்திய வீரர்களில் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மாவின் அடிப்படை விலை ரூ. 2 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது தான் போட்டி தொடருக்கான வீரர்களின் அதிகபட்ச அடிப்படை விலையாகும். இதேபோல் இங்கிலாந்து வீரர்கள் பென் ஸ்டோக்ஸ், கிறிஸ்வோக்ஸ், இயான் மோர்கன், இலங்கை அணியின் கேப்டன் ஏஞ்சலோ மேத்யூஸ், ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர்கள் மிட்செல் ஜான்சன், கம்மின்ஸ் ஆகியோருக்கும் அடிப்படை விலையாக ரூ. 2 கோடி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இதற்கு அடுத்தபடியாக இங்கிலாந்து வீரர் பேர்ஸ்டோ, நியூசிலாந்து வீரர் டிரென்ட் பவுல்ட், ஆஸ்திரேலிய வீரர்கள் பிராட் ஹாடின், நாதன் லயன், தென் ஆப்பிரிக்க வீரர் கைல் அப்போட், வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஜாசன் ஹோல்டர் ஆகியோரின் அடிப்படை விலை ரூ.1½ கோடியாக நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.
சர்வதேச போட்டியில் விளையாடிய 24 இந்திய வீரர்களின் அடிப்படை விலையாக ரூ.30 லட்சம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஐ.பி.எல். அணிகள் வீரர்களை தேர்வு செய்ய மொத்தம் ரூ.143.33 கோடியை செலவிட முடியும். ஒவ்வொரு அணியிலும் அதிகபட்சமாக 9 வெளிநாட்டு வீரர்கள் உள்பட 27 பேர் இடம் பெறலாம். இந்த சீசனில் மொத்தம் 28 வெளிநாட்டுக்காரர்கள் உள்பட 76 வீரர்கள் ஏலத்தில் எடுக்கப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.