எலும்புகள் வளர கால்சியம் சத்து அவசியம்

ஒரு கட்டிடத்திற்கு அஸ்திவாரம் முக்கியம். அது போல நமது உடம்பை ஒவ்வொரு உறுப்புகளும் தாங்கி பிடித்து கொண்டிருக்கின்றன. இப்படி பாதுகாப்பாக வைப்பதற்கு ஒவ்வொரு உறுப்புகளுக்கும், ஒவ்வொரு விதமான சத்துப்பொருட்கள் தேவைப்படுகின்றன.

உடலை தாங்கி பிடிக்க முக்கிய பங்கு வகிப்பது எலும்புளே. எலும்பு மட்டும் இல்லாவிட்டால் என்னாவாகியிருக்கும்? நேராக நிற்க முடியாது. நேராக நடக்க முடியாது. குனிய முடியாது. நிமிர முடியாது, தலை நேராக நிற்காது. இப்படி நினைத்தே பார்க்க முடியாத ஒரு நிலை ஏற்பட்டிருக்கும்.

மூளையை மண்டை எலும்பும், இருதயம் மற்றும் நுரையீரலை விலா எலும்புகளும், வாய், கண், காது, மூக்கு ஆகியவற்றை தாடை எலும்பும் மிக பத்திரமாக பாதுகாக்கிறது. நாம் வீடு கட்ட பயன்படுத்தும கான்கிரீட் கலவையைவிட நான்கு மடங்கு ஸ்ட்ராங்கானது, உறுதியானது மனித எலும்பு.

பிறக்கும் போது ஒரு குழந்தையின் உடலில் சுமார் 350 எலும்புகள் இருக்கும்.

ஆனால் குழந்தை வளர வளர உடலின் சில இடங்களில் பல சின்ன சின்ன எலும்புகள் ஒன்றாக சேர்ந்து ஒரு பெரிய எலும்பாகிவிடுகிறது.

அப்போது எலும்புகளின் எண்ணிக்கையை பார்த்தால் சுமார் 206 எலும்புகள் இருக்கும்.

எலும்பு வளர்ச்சிக்கு எலும்பு உறுதிக்கு மிக மிக முக்கியமான ஒரு சத்துப்பொருள் கால்சியமே. உடம்புக்கு எல்லாச்சத்துக்களும் முக்கியம்தான் என்றாலும், கால்சியத்தின் பங்கு அதில் குறிப்பிடத்தக்கது. கால்சியம் உடல் வளர்ச்சிக்கு மட்டுமல்லாது மனிதனுடைய எலும்பு, பற்கள் முதலியவைகள் பாதுகாக்கவும் தேவைப்படுகிறது. இவைபோக இருதயம், தசைகள், நரம்புகள் முதலியவற்றையும் பாதுகாக்க கால்சியம் பயன்படுகிறது.

எலும்புகள் வளர கால்சியம் தான் அதிகமாக தேவைப்படுகிறது. நம் உடலில் உள்ள மொத்த கால்சியத்தில் 99 சதவீதம் எலும்புகளில் தான் படிந்திருக்கிறது. எனவே எலும்பு என்றால் கால்சியம் என்றும் கால்சியம் என்றால் எலும்பு என்று சொல்லும் அளவிற்கு ஒன்றோடொன்று இணைந்திருக்கின்றன.

கால்சியம் நம் உடலுக்கு தினமும் தேவைப்படுகிறது.

நம் சாப்பிடும் பாலில் மட்டுமில்லாது காய்கறிகள், கீரைகள், விதைகள், பருப்புகள், கேழ்வரகு, பட்டாணி, பாதாம், பீன்ஸ், பாசிப்பருப்பு, கறிவேப்பிலை, வெந்தயக்கீரை, கொத்தமல்லி, சோயா பீன்ஸ், உலர்ந்த அத்திப்பழம், முள்ளங்கி கீரை, வெற்றிலை ஆகியவற்றிலும் – பாலிலிருந்து செய்யப்படும் யோகர்ட், பாலடைக்கட்டி, சோயா பால், ஆரஞ்சு பழம், ஆகியவற்றிலும் அநேக அசைவ உணவுகளிலும் கால்சியம் அதிக அளவில் இருக்கிறது.

குழந்தைகளுக்கும், கர்ப்பிணிபெண்களுக்கும், தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கும், மாதவிடாய் நின்றவர்களுக்கும், வயதான பெண்களுக்கும் கால்சியம் சத்து தினமும் தேவைப்படுகிறது.