கிளிநொச்சி இரணைமடு பிரதேசப் பகுதியில் இன்றும் மக்களின் காணிகள் கொடுக்கப்பட வில்லை அதற்கான காரணம் என்ன? பிரதமர் ரணில் விக்ரமசிங்க அதற்கு பதில் தர வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்தார்.
இன்றைய தினம் பாராளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார்.
சிறீதரனின் குறித்த கேள்விக்கு பிரதமர் ரணில் பதில் அளிக்கும் போது,
இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக வரும் மீனவர்களை கட்டுப்படுத்த குறித்த இரணைமடு பிரதேசம் அவசியமானதாகும்.
அதேபோன்று வடக்கிற்கு தற்போது அதிகளவான போதைப் பொருள் கொண்டு வரப்படுகின்றது.
நாட்டுக்குள் கொண்டு வரப்படும் போதைப் பொளுளைக் கட்டுப்படுத்த குறித்த பிரதேசம் கடற்படையினரின் கட்டுப்பாட்டில் இருக்கவேண்டியது அவசியமானதாகும்.
அதேபோல் கடற்பகுதியில் வடக்கின் கேந்திர நிலையமாக இரணைமடு தீவு காணப்படுகின்றது. அதன் காரணமாக அந்தப் பகுதி கடற்படை வசம் இருக்க கட்டாயம் காணப்படுகின்றது.
அங்கு குடிநீர் பிரச்சினைகள் ஏற்படக் கூடிய வாய்ப்புகள் அதிகம் காணப்படுகின்றது எனினும் அது நிவர்த்தி செய்யப்பட உள்ளது.
என்றாலும் அங்கு மக்களை மீள் குடியேற்றப்பட நடவடிக்கைகள் தொடர்பில் சுவாமிநாதன், ருவான் விஜேவர்தன போன்றோருடன் ஆலோசனை செய்யப்படும் எனவும் பிரதமர் பதில் அளித்தார்.
பிரதமருடைய பதிலினைத் தொடர்ந்து சிறீதரன் கருத்து தெரிவிக்கையில்,
இரணைமடுவில் 26 வருடங்களுக்கு மேலாக வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட மக்கள் சொந்த இடங்கள் இல்லாமல் துயர் அடைந்து வருகின்றார்கள்.
இதுவரைக்காலமும் விடுதலைப்புலிகள், ஆயுதங்கள் கடத்தல் என கூறிக்கொண்டு வந்தீர்கள். ஆனால் இப்போது புதிதாக போதைப்பொருளைக் காரணம் காட்டி மக்கள் காணிகளை வைத்திருப்பது பொறுத்தமற்றது.
அதேபோல அங்கு தண்ணீர் பிரச்சினை ஏற்பட வாய்ப்பு இல்லை. 60 வருடங்களுக்கு முன்னரே நிலக்கீழ் நீர் நிலையம் அங்கு அமைக்கப்பட்டு விட்டது.
ஆதலால் போலியான காரணங்களைக் கூறாமல் இரணைமடு மக்களின் காணிகளை ஒப்படைக்க நடவடிக்கை எடுங்கள் அது நாட்டின் ஒற்றுமைக்கு வழி சமைத்துக் கொடுக்கும் எனவும் சிறீதரன் தெரிவித்தார்.