யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்த பின்னர் மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்காமல் இருக்க மஹிந்த ராஜபக்ஸ பல வழிமுறைகளை கொண்டுவந்திருந்தார். எனினும் தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் மூலம் மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்குவதாக முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
கூட்டு எதிர்க்கட்சியினரின் ஊடகவியலாளர்கள் சந்திப்பு நேற்று இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதை கூறியுள்ளார். தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
நாட்டில் மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்காமல் இருப்பதற்கு 16 அமைப்புக்களுக்கு தடை விதித்ததுடன், 424 பேருக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தடை விதித்திருந்தார்.
ஆனால் தற்போதைய அரசாங்கம் அந்த தடைகளை தளர்த்தி தடைசெய்யப்பட்ட 16 அமைப்புகளில் 8 அமைப்புகளுக்கு அனுமதி அளித்துள்ளது.
மேலும் தடைசெய்யப்பட்ட 424 பேருக்கான தடையை 155ஆக குறைத்துள்ளது என சுட்டிக்காட்டியுள்ளார்.
பின்னர் தடை நீக்கப்பட்ட அமைப்புக்கள் ஒன்றிணைந்தன. இதன்விளைவாக வடக்கில் மாவீரர் தினம் சுதந்திரமாக அனுஸ்டிக்கப்படுகின்றது. விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் புகைப்படங்கள் பரவலாக காட்சிப்படுத்தப்படுகின்றதாக குற்றம் சுமத்தினார்.
மேலும், வடக்கில் பயங்கரவாதம் தலைதூக்கும் ஆபத்து உள்ளமையால், காணாமல் போனோர் தொடர்பிலான சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிடக்கூடாது எனவும் இதன்போது முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.