வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்டிலும் வெற்றி தொடரும்: கும்பிளே

இந்தியாவுக்கு வந்துள்ள வங்காளதேச கிரிக்கெட் அணி ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. இந்த டெஸ்ட் ஐதராபாத்தில் நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது. இதையொட்டி இந்திய அணியின் பயிற்சியாளர் கும்பிளே நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றோம். அதே உத்வேகத்தை இந்த போட்டியிலும் தொடர விரும்புகிறோம். உள்ளூர் சீசன் இதுவரை எங்களுக்கு நன்றாக அமைந்துள்ளது. இந்த போட்டியிலும் வெற்றி பெற்றுஅதன் மூலம் நம்பிக்கையை அடுத்த போட்டிக்கு எடுத்து செல்ல வேண்டும். ஏனெனில் இந்த போட்டிக்கு பிறகு மேலும் சில டெஸ்டுகளில் விளையாட உள்ளோம்.

மிகவும் மேம்பட்டு வரும் ஒரு அணி வங்காளதேசம். சமீபத்தில் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவர்கள் உண்மையிலேயே சிறப்பாக செயல்பட்டு இருந்தனர். நிச்சயம் அவர்களை நாங்கள் மதித்து ஆக வேண்டும். சில தரமான வீரர்கள், ஆல்-ரவுண்டர்கள் அந்த அணியில் அங்கம் வகிக்கிறார்கள். எனவே இது சுவாரஸ்யமான டெஸ்ட் போட்டியாக இருக்கப்போகிறது.

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தியது குறித்தே பேசுகிறார்கள். ஆனால் வெற்றிக்கு வேகப்பந்து வீச்சாளர்களின் பங்களிப்பு இருந்ததையும் மறந்து விடக்கூடாது.

இவ்வாறு கும்பிளே கூறினார்.

தனிப்பட்ட முறையில் இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா ஆகியோருக்கு இந்த டெஸ்ட் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது. ஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசையில் அஸ்வின் 887 புள்ளிகளுடன் முதலிடத்திலும், ஜடேஜா 879 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும் உள்ளனர். 8 புள்ளி மட்டுமே பின்தங்கி உள்ள ஜடேஜா, வங்காளதேச டெஸ்டில் விக்கெட் வேட்டை நடத்தினால், அஸ்வினை பின்னுக்கு தள்ளிவிட வாய்ப்புள்ளது.