நான் நினைத்ததை விட அதிக அளவில் ஐதராபாத் ஆடுகளம் பயன்தரும்: அஸ்வின்

இந்தியா – வங்காள தேசம் அணிகளுக்கு இடையிலான ஒரேயொரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) தொடங்குகிறது. இதற்காக இந்திய அணி ஐதராபாத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.

இந்திய அணிக்கு வழங்கப்பட்ட பயிற்சி ஆடுகளத்தில் அஸ்வின் பந்து அதிக அளவில் பவுன்ஸ் ஆகவில்லை. இருந்தாலும் அவர் கவலைப்படவில்லை. தான் கற்பனை செய்து வைத்திருப்பதை விட அதிக அளவில் போட்டிக்கான ஆடுகளம் தனக்கு உதவி செய்யும் என்று கூறியுள்ளார்.

மேலும், ஐதராபாத் டெஸ்ட் போட்டி குறித்து அஸ்வின் கூறுகையில் ‘‘இந்த மைதானத்தின் மத்திய ஆடுகளத்தில் சற்று அதிகமாக பவுன்ஸ் இருந்தது. ஒட்டுமொத்த வசதிகள் சிறப்பாக இருந்தது. பவுண்டரி கோடு அருகே பச்சைப்பசேல் என்று புற்கள் உள்ளன. சுழற்பந்து வீச்சாளர்களை பொறுத்த வகையில் இது பெரிய மைதானம். இதனால் டாஸ்அப் மற்றும் ஷார்ட் பந்துகளை வீச முடியும். ஆடுகளத்தில் பந்து சற்று நின்று செல்லும், பவுலர்கள் நினைத்ததை விட பவுன்ஸ் அவர்களுக்கு மேலும் சாதகமாக இருக்கும். இந்த ஆடுகளத்தில் நான் மகிழ்ச்சியாக பந்து வீசுவேன்.

வங்காள தேசம் நியூசிலாந்து தொடரை முடித்துக் கொண்டு இங்கே வந்துள்ளது. நியூசிலாந்து தொடர் மிகவும் எளிதானதல்ல என்பது நமக்குத் தெரியும். அவர்களை எளிதான அணி என்று கருதக்கூடாது’’ என்றார்.