ஷாருக்கான் நடித்துள்ள ‘ராய்ஸ்’ படத்துக்கு பாகிஸ்தானில் தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த படம் குடியரசு தினத்தில் இந்தியாவில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. வசூலிலும் சாதனை நிகழ்த்தி உள்ளது. பாகிஸ்தான் நடிகை மஹிரா கானும் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். பாகிஸ்தானில் வருகிற ஞாயிற்றுக்கிழமை ‘ராய்ஸ்’ படத்தை வெளியிட திட்டமிட்டு இருந்தனர்.
இதற்காக பாகிஸ்தான் தணிக்கை குழுவினர் பார்வைக்கு ‘ராய்ஸ்’ படம் அனுப்பி வைக்கப்பட்டது. படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் இஸ்லாமியர்களை குற்றவாளிகளாகவும் தேடப்படுபவர்களாகவும் சித்தரிக்கும் சர்ச்சைகாட்சிகள் இருப்பதாக ஆட்சேபம் தெரிவித்து பாகிஸ்தானில் ‘ராய்ஸ்’ படத்தை திரையிட தடை விதித்து உள்ளனர். இது படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு ஜம்மு காஷ்மீரில் உள்ள ஊரி பகுதியில் பாதுகாப்பு படையினர் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவத்தினர் எல்லை தாண்டி பயங்கரவாதிகள் முகாம்கள் மீது விமான தாக்குதல் நடத்தி அழித்தார்கள். பாகிஸ்தான் நடிகர்கள் இந்திய படங்களில் நடிக்கவும் எதிர்ப்பு கிளம்பியது. பாகிஸ்தானும் இந்திய படங்களை திரையிடுவதை நிறுத்தியது.
தற்போது தடையை நீக்கி பிப்ரவரி 1-ந்தேதி முதல் இந்திய படங்களை பாகிஸ்தானில் திரையிட பிரதமர் நவாஸ் செரீப் அனுமதி அளித்துள்ளார். இந்த நிலையில்தான் ஷாருக்கானின் ராய்ஸ் படத்திற்கு அங்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.