வில்லனாக நடிக்க ஆசை: ராண்டில்யா

25-க்கும் மேற்பட்ட குறும்படங்கள், விளம்பர படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணிபுரிந்தவர் ராண்டில்யா.

கேமரா மேன் ஆக இருந்த இவர் தற்போது நடிகராகவும் மாறி இருக்கிறார்.

இது பற்றி கேட்ட போது ராண்டில்யா அளித்த பதில்…

“ நான் கேமராமேன் பயிற்சி பெற்று 25-க்கும் மேற்பட்ட குறும்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தேன். நாளைய இயக்குனர் நிகழ்ச்சிக்காக நான் ஒளிப்பதிவு செய்த ‘மவுனகீதம்’ குறும்படத்துக்காக எனக்கு சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருது கிடைத்தது. பல விளம்பர படங்களுக்கு ஒளிப்பதிவு செய்து இருக்கிறேன். ஐ.பி.எல்.விளம்பர படங்களுக்கும் ஒளிப்பதிவு செய்திருக்கிறேன். டோனி நடித்த விளம்பர படங்களுக்கும் ஒளிப்பதிவு செய்துள்ளேன். விஜய் சேதுபதி, கிருஷ்ணா நடித்த ‘வன்மம்’ படஇயக்குனர் ஜெயகிருஷ்ணா என்னை அந்த படத்தில் முதன் முதலாக நடிக்க வைத்தார். அவருக்கு நான் கடமைப்பட்டி ருக்கிறேன். இதையடுத்து எஸ்.ஏ.சந்திரசேகர், பா.விஜய் நடித்த ‘நையப்புடை’, ‘வெள்ளிக்கிழமை 13-ந்தேதி’, ‘மையம்’ படங்களில் நடித்தேன். அதே நேரம் உதவி கேமரா மேனாகவும் பணிபுரிந்தேன்.

இப்போது ‘இவன்தந்திரன்’, ‘143’, ‘ஒரு தடவை பார்க்கலாம்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறேன். நல்ல ஒளிப்பதிவாளராக விரும்பும் அதே வேளையில், சிறந்த நடிகராகவும் பெயர் வாங்க வேண்டும் என்பதே எனது விருப்பம். தற்போது சிறுசிறு வேடங்கள் வருகின்றன. முக்கியமான வேடங்களில் நடிக்க வேண்டும். வில்லனாக நடிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். அந்த வாய்ப்பு விரைவில் கிடைக்கும் என்று நம்புகிறேன்” என்றார்.