பொறுப்புக்கூறலுக்கான நீதிப் பொறிமுறையில் வெளிநாட்டு நீதிபதிகளுக்கு இடமில்லை என என்று வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டுச் செய்தியாளர்களை நேற்றுச் சந்தித்துக் கலந்துரையாடிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து கருத்து வெளியிட்டவர்,
பொறுப்புக்கூறலுக்கான நீதிப் பொறிமுறை, வெளிநாட்டு பங்களிப்புடன் கூடிய உள்நாட்டு பொறிமுறையாகவே இருக்கும்.
ஆனால் நிச்சயமாக வெளிநாட்டு நீதிபதிகள் இதில் இடம்பெறமாட்டார்கள். ஏனென்றால், அதற்கு நாட்டின் சட்டங்களை மாற்ற வேண்டும்.
வெளிநாட்டு பங்களிப்புக்கு நாம் எதிரானவர்கள் அல்ல. ஆனால், வெளிநாட்டு நீதிபதிகளை நியமிப்பதென்றால், நாட்டின் நீதித்துறைச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்ய வேண்டும்.
நம்பகமான சுதந்திரமான உள்நாட்டு பொறிமுறை ஒன்றை அமைக்கும் எமது யோசனையை ஐ.நா மனித உரிமைகள் பேரவை ஏற்றுக் கொண்டிருக்கிறது.
எத்தகைய நீதிப் பொறிமுறையை உருவாக்குவது என்பது குறித்து தீர்மானிக்கும் உரிமை இலங்கைக்கு இருப்பதாக, ஐ.நா மனித உரிமை ஆணையாளர் இலங்கைக்கு பயணத்தின் போது கூறியிருந்தார்.
நாம் பொறுப்புக்கூறல் பொறிமுறை தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு அளித்த வாக்குறுதியில் இருந்து குத்துக்கரணம் அடிக்கவில்லை.
போர்க்குற்ற விசாரணை தொடர்பாக வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கு மேலும் கால அவகாசம் தேவைப்படுகிறது.
அதனையே ஜெனிவாவில் கோரவிருக்கிறோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.