யாழில் உருவெடுத்துள்ள சினிமா பாணியிலான வாள்வெட்டு! நீதிமன்றங்களுக்கு இளஞ்செழியனின் உத்தரவு!!

யாழில் தற்போது உருவாகியுள்ள வாள்வெட்டு கலாச்சாரமானது நீதிமன்றங்களுக்கும் நீதிமன்றங்களின் தண்டனைகளுக்கும் சவாலாக அமைந்துள்ளதாகவும், இத்தகைய சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோருக்கு அதிகபட்ச தண்டனைகளை வழங்க வேண்டும் என்று யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் தெரிவித்துள்ளார்.

சுமார் ஒன்பது மாதங்களுக்கு முன்பு யாழ்.மாநகரசபை எல்லைக்குள் கைக்குண்டு ஒன்றை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு நீதிவான் நீதிமன்றால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஒருவரின் பிணை மனு மீதான விசாரணை இன்று யாழ்.மேல் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது குறித்த பிணை மனுவை நிராகரித்த நீதிபதி இளஞ்செழியன் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இது குறித்து தொடர்ந்து தெரிவிக்கையில்,

பிணை கோருவது என்பது எதிரியின் உரிமையாக இருப்பினும் அந்த பிணையை வழங்குவதில் நீதிமன்றமானது சமூக அக்கறையை பிரதானமாக கருத்திலெடுத்தே பிணையை வழங்கும் என்றார்.

நீதிமன்றங்களால் வழங்கப்படும் பிணைகளானது சமூகத்தின் பாதுகாப்பை கருத்தில் கொண்டே இதுவரை யாழ்.மேல் நீதிமன்றால் வழங்கப்பட்டு வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், வடக்கில் அதிகரிக்கும் குற்றச்செயல்களை கட்டுப்படுத்த சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோருக்கு அதிகபட்ச தண்டனைகளை வழங்க வேண்டும். இதன் மூலமே இவற்றை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும் என அறிவித்தார்.

தென்னிந்திய சினிமா பாணியிலான வாள்வெட்டுக் குழு மோதல் கலாச்சாரமானது யாழ்ப்பாணத்தில் உருவெடுத்துள்ளது.

கடந்த ஒன்பது மாத காலமாக கட்டுப்பாட்டுக்குள் வைக்கப்பட்டிருந்த வாள்வெட்டு மற்றும் குழு மோதல் கலாச்சாரம் இந்த வருடத்தின் தை மாத இறுதிப் பகுதியில் மீண்டும் புதியதொரு குழுவால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் யாழ். இளைஞர்களது எதிர்காலம் சீரழிந்துகொண்டிருக்கின்றது.

தெற்கில் இருக்கும் அரசியல் மட்டத்தில் கூட யாழ்ப்பாணத்தின் பாதுகாப்பு தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அளவுக்கு யாழ்ப்பாணத்தின் இன்றைய நிலை மிக மோசமானதாகவும் கேள்விக்குறியாகவும் உள்ளது.

எனவே இத்தகைய குற்றச் செயல்களை கட்டுப்படுத்த வேண்டுமாயின் இந்த குற்றங்களில் ஈடுபடுகின்றவர்களுக்கு நீதிமன்றங்கள் அதிகபட்ச தண்டனையை வழங்க வேண்டும் என யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் தெரிவித்துள்ளார்.