வடக்கு மக்களின் காணிப்பிரச்சினையை வைத்து சிலர் சுயலாப அரசியலில் ஈடுபடுகின்றனர் என பாராளுமன்ற உறுப்பினர் டக்களஸ் தேவானந்தா குற்றம் சுமத்தியுள்ளார்.
எனவே, காணியற்ற மக்களின் பிரச்சினையைத் தீர்த்து வைக்க அரசாங்கம் முன்வரவேண்டும் எனவும் அவர் இதன்போது கோரிக்கை விடுத்துள்ளார்.
நேற்றைய தினம் பாராளுமன்றில் கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். வலி. வடக்கு பிரதேசத்தில் பொது மக்களின் காணிகள் இன்னும் விடுவிக்கப்படாமல் இருக்கின்றது.
எனவே, அந்த மக்களின் காணிகளை விடுவிக்க மத்திய அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். சிலர் இந்த விடயத்தை வைத்துக்கொண்டு தமது சுயலாப அரசியலை நடத்திச் செல்கின்றனர்.
இதேவேளை, தமது காணிகளை விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி கடந்த சில நாட்களாக கேப்பாபுலவு, பிளவுக்குடியிருப்பு ஆகிய பகுதிகளில் தமிழ் மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அந்த மக்களின் காணிகள் இன்னும் படையினரின் வசம் இருக்கின்றது. எனவே, இந்த விடயம் குறித்தும் மத்திய அரசாங்கம் கவனம் செலுத்தி அவர்களின் காணிகளை விடுவிக்க முன்வர வேண்டும்.
தமது சொத்துகளை உறுதிப்படுத்த, அடையாளம் காண முடியாத மக்கள் இருக்கின்றனர். காணி, சொத்து ஆவணங்கள் சேதமடைந்த, அழிவடைந்த நிலையிலும் மக்கள் உள்ளனர்.
எனவே, அந்த மக்களின் காணிகளைப் பெற்றுக்கொடுக்க காணிக்கச்சேரிகளை நடத்த வேண்டும். அவர்களுடைய காணிகளைப் பெற்றுக்கொடுக்க உரிய வழிமுறையை உருவாக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.