கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு இந்த நல்லாட்சி அரசாங்கத்திற்கு இருப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் இதனை தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் பாராளுமன்றில் கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்கும் தற்போதைய நல்லாட்சிக்கும் அதிக வேறுபாடுகள் எதுவும் கிடையாது.
மஹிந்த ஆட்சியில் காணப்பட்ட இராணுவ ஆட்சியை முடிவுக்கு கொண்டுவருவதற்காகவே, மக்கள் தேசிய அரசாங்கத்தை கொண்டு வந்துள்ளனர். எனினும், கடந்த அராசங்கத்தை போலவே இந்த அரசாங்கமும் இரட்டை வேடம் போடுகின்றது.
சர்வதேசத்திற்கு ஒன்றையும், உள்நாட்டில் வேறு ஒன்றையும் கூறி வருகின்றது. நாட்டில் நல்லாட்சி நிலவுகின்றதா அல்லது இராணுவ ஆட்சி நிலவுகின்றதா என்பதை அறிய விரும்புவதாகவும் அவர் பாராளுமன்றில் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதேவேளை, கேப்பாபிலவு மக்களின் காணிகள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் எனவும், தேசிய பாதுகாப்பை காரணம் காட்டி தமிழ் மக்களின் காணிகளைப் பறிக்க கூடாது.
எவ்வாறாயினும், மேலிடத்தில் இருந்து உத்தரவு வழங்கப்பட்டால் கேப்பாபிலவு மக்களின் காணிகளை விடுவிக்க முடியும் என விமான படை அதிகாரி தெரிவித்துள்ளதாகவும், அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பொது மக்களின் காணிகள் என உறுதிப்படுத்தப்பட்டால் அதனை விடுப்பதாகவும் விமானப் படை அதிகாரிகள் கூறுகின்றனர். எனவே, காணிகளை வழங்கும் அதிகாரம் விமானப் படைக்கு வழங்கப்பட்டிருக்கின்றதா என அவர் கேள்வியெழுப்பியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.