பருவகாலத்திற்கு முன்னர் யாழ். மேல் நீதிமன்றில் வித்தியா படுகொலை வழக்கு..

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை தொடர்பில் நீதிமன்றின் முதல் பருவகாலத்திற்கு முன்னதாக யாழ்.மேல் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டமா அதிபர் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது. சட்டமா அதிபர் திணைக்களத்தின் சட்டத்தரணி நாகரட்ணம் நிஸாந்த் இதனை தெரிவித்துள்ளார்.

கடந்த 2015ஆம் ஆண்டு மே மாதம் புங்குடுதீவு மாணவி வித்தியா கூட்டு பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருந்தார்.

இந்த சம்பவம் தமிழர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. மேலும், இந்த படுகொலை சம்பவம் தொடர்பில் 12 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த அனைவருக்கும் எதிரான வழக்கு விசாரணைகள் யாழ். ஊர்காவற்துறை நீதிமன்றில் இடம்பெற்று வருகின்றது. அத்துடன், குறித்த சந்தேகநபர்கள் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது எதிர்வரும் 05 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை, இந்த படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முதல் 9 சந்தேகநபர்களின் நீதவான் நீதிமன்ற விளக்கமறியல் காலம் ஒரு வருடத்தை பூர்த்தி செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.