பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவின் உள்ள குடிசைப் பகுதியில் நேற்று நள்ளிரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. நள்ளிரவில் ஒரு இடத்தில் ஏற்பட்ட தீயானது, பரோலா காம்பவுண்டு முழுவதும் மளமளவென பரவியதுடன், அருகில் உள்ள பகுதிக்கும் பரவியது. தீ கொழுந்துவிட்டு எரிந்ததால், அந்த பகுதிகள் முழுவதும் புகை மூட்டத்தால் சூழப்பட்டு காணப்பட்டது.
மணிலா துறைமுகம் அருகே உள்ள பகுதிகளில் ஏற்பட்ட இந்த தீ விபத்தால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் முற்றிலும் சேதம் அடைந்துள்ளதாக அந்நாட்டு தீயணைப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனால், 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் தங்களது வீடுகளை இழந்து தவித்து வரும் அவல நிலை உருவாகியுள்ளது. இந்த விபத்து ஏராளமானோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனையடுத்து மீட்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளதாகவும், வீடுகளை இழந்தோருக்கு உணவு மற்றும் குடிநீர் வழங்கும் பணிகள் தொடங்கியுள்ளதாகவும் அந்நாட்டு சமூக நலத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தீ விபத்தில் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்த பலர் சாலைகளில் சிறிய குடில்களை அமைத்து தற்காலிகமாக இருந்து வருகின்றனர்.