முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் நேரில் சந்தித்து திடீரென ஆதரவு தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அதிமுக உடைந்து சிதறுவது உறுதியாகி உள்ளது.
அதிமுகவையும் ஆட்சியையும் சசிகலா கைப்பற்றுவதை சசிக்க முடியாத நிர்வாகிகள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் அணிதிரண்டுள்ளனர். சசிகலாவுக்கு எதிரான அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தலைமையை ஏற்பதாக அறிவித்துள்ளனர்.
முதல்வர் ஓ. பன்னீர்செல்வமும் தாம் அதிமுக பொருளாளர் என்பதால் கட்சி வங்கி கணக்குகளை முடக்க உத்தரவிட்டிருக்கிறார். அத்துடன் சசிகலா இடைக்கால பொதுச்செயலர் என்பதால் பொதுச்செயலர் பதவியும் காலியாகவே இருக்கிறது எனவும் பகிரங்கமாக அறிவித்தார்.
இதனால் சசிகலாவுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையில் அதிமுக அவைத் தலைவரான மதுசூதனன் திடீரென சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்துக்கு வருகை தந்து தமது ஆதரவையும் தெரிவித்திருக்கிறார். அதிமுகவின் பொதுச்செயலராக சசிகலா பதவியேற்க வேண்டும் என முதலில் வலியுறுத்தியவர் மதுசூதனன்.
தற்போது மதுசூதனன், முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அணியில் இணைந்துள்ளது மன்னார்குடி கோஷ்டியை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
அதிமுகவில் அவைத் தலைவர் பதவி முதன்மையானது. அதற்கு அடுத்தது பொதுச்செயலர்; பொருளாளர் பதவிகள்.
தற்போது அவைத் தலைவர் மதுசூதனன், பொருளாளர் ஓ. பன்னீர்செல்வம் இணைந்திருப்பதால் அதிமுக உடைந்து சிதறுவது உறுதியாகிவிட்டது.