முஷ்பிகுர் ரஹிம் தலைமையிலான வங்காளதேச கிரிக்கெட் அணி ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. இந்தியா-வங்காளதேச அணிகள் மோதும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஐதராபாத்தில் இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது.
இந்திய அணி கேப்டன் விராட்கோலி நேற்று அளித்த பேட்டியில், ‘ஒரு ஆட்டத்தில் ஒருவர் சிறப்பாக ஆடியதால், கடந்த 2 ஆண்டுகளாக கடினமாக உழைத்து நன்றாக செயல்பட்டு வரும் மற்றொரு வீரரை புறந்தள்ளிவிடமுடியாது என்று நான் கருதுகிறேன்.
ரஹானே கடந்த 2 ஆண்டுகளாக அணிக்கு அளித்த பங்களிப்பை நாம் நினைத்து பார்க்க வேண்டியது அவசியமானதாகும். டெஸ்ட் போட்டியில் ரஹானே நமது அணியின் மிகவும் நிலையான பேட்ஸ்மேன். அவர் உடல் தகுதியுடன் இருக்கையில் ஆடும் லெவனில் இடம் பெற எப்பொழுதும் தகுதி படைத்தவர்.
ரஹானே காயம் அடைந்ததால் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் அணியில் சேர்க்கப்பட்ட கருண்நாயர் முச்சதம் அடித்து அவருடைய இடத்தை நிரப்பினார். அவரது அந்த குறிப்பிடத்தக்க ஆட்டத்தின் மூலம் அணியில் மீண்டும் இடம் பிடித்துள்ளார். இருப்பினும் ரஹானேவுக்கே முன்னுரிமை அளிக்கப்படும்.
நானும், அணி நிர்வாகமும் வீரர்களுடன் தகவல்களை பகிர்ந்து கொள்வது முக்கியமானதாகும். எங்களது வேகப்பந்து மற்றும் சுழற்பந்து வீச்சு நன்றாக இருக்கிறது. வெற்றியை பெற பந்து வீச்சாளர்கள் 20 விக்கெட்டுகளையும் வீழ்த்த வேண்டியது அவசியமானதாகும்.
எங்கள் அணி நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. எதிரணியை பற்றி நாங்கள் அதிகம் கவனம் செலுத்தமாட்டோம். ஆடுகளத்தின் தன்மைக்கு தகுந்தபடி பந்து வீச்சாளர்கள் களம் இறக்கப்படுவார்கள்’ என்று தெரிவித்தார்.