பக்தர்களுக்கு உதவிய சீரடி சாய்பாபா!!

தைப்பூச திருநாளை முன்னிட்டு தமிழ்நாட்டில் முருகப் பக்தர்கள் விதம், விதமான காவடிகள் எடுத்துச் செல்வதைப் பார்த்து இருப்பீர்கள். சமீப காலமாக பழனிக்கும், திருச்செந்தூருக்கும் காவடி எடுத்துச் செல்லும் பக்தர்கள் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்து விட்டது.

மராட்டிய மாநிலத்திலும் சிவபெருமானுக்கு பக்தர்கள் காவடி எடுக்கும் வழக்கம் உள்ளது. மராட்டிய மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஜேஜுரி என்ற தலத்துக்கு சிவபக்தர்கள் ஆண்டுதோறும் குறிப்பிட்ட தினத்தன்று காவடி எடுத்துச் செல்வார்கள்.

சீரடியில் இருந்தும் பக்தர்கள் ஜேஜுரிக்கு காவடி எடுத்துச் சென்றனர். சீரடியில் இருந்து ஜேஜுரி சுமார் 150 மைல் தொலைவில் இருக்கிறது. சீரடியைச் சேர்ந்த பக்தர்கள் மகல்சாபதி தலைமையில் காவடி எடுத்துச் செல்வதுண்டு. அப்படி காவடி எடுத்துச் செல்பவர்கள் ஒவ்வொரு ஊரிலும் தங்குவதற்கு உரிய அனுமதிச் சீட்டு பெற வேண்டும் என்று ஆங்கிலேயர்கள் உத்தரவிட்டிருந்தனர்.

ஒரு தடவை சீரடியைச் சேர்ந்தவர்கள் மகல்சாபதி தலைமையில் காவடி யாத்திரை மேற்கொண்டிருந்தனர். ஒரு ஊரில் அவர்கள் தங்கிய போது ஒரு பக்தரிடம் மட்டும், அந்த ஊரில் தங்குவதற்கு உரிய அனுமதிச் சீட்டு இல்லை என்பதை போலீசார் கண்டு பிடித்தனர்.

அவரைப் பிடித்து போலீஸ் நிலையத்தில் வைத்தனர். இதை அறிந்ததும் அந்த பக்தருக்கு அனுமதிச் சீட்டு வாங்கும் நடவடிக்கைகளில் மகல்சாபதி ஈடுபட்டார்.
யாத்திரைக் குழுவில் இருந்த ஒருவரை, அந்த ஊர் கிராம நிர்வாக அதிகாரியிடம் அனுப்பி, அனுமதிச் சீட்டு வாங்கி வருமாறு கூறினார். அந்த நபரும் கிராம நிர்வாக அதிகாரியிடம் சென்று விபரத்தைச் சொல்லி தங்குவதற்கு உரிய அனுமதிச்சீட்டு தருமாறு கூறினார்.

அந்த கிராம அதிகாரிக்கு உடனே அனுமதிச் சீட்டுக் கொடுக்க மனம் வரவில்லை. அவனிடம் ஏதாவது வேலை வாங்கிக் கொண்டு அனுமதிச் சீட்டுக் கொடுக்கலாம் என்று நினைத்தார். என்ன வேலைக் கொடுக்கலாம்? என்று சுற்றும் முற்றும் பார்த்தார். ஒரு இடத்தில் நிறைய மரத்துண்டுகள் கிடப்பதைப் பார்த்தார்.

அந்த மரத்துண்டுகளை சிறு, சிறு துண்டுகளாக உடைக்கும் வேலையைக் கொடுக்கலாம் என்று முடிவு செய்தார். வீட்டுக்குள் இருந்து ஒரு கோடாரியை எடுத்து வரச் செய்தார். அந்த கோடாரியை பக்தனிடம் கொடுத்து, அந்த மரத்தை சிறு, சிறு துண்டுகளாக வெட்டிப் போட்டு விட்டு வா, உனக்கு இந்த ஊரில் தங்குவதற்கான அனுமதிச் சீட்டைத் தருகிறேன் என்றார்.

பக்தனுக்கு கடும் அதிர்ச்சியாக இருந்தது. என்றாலும் அனுமதிச் சீட்டு வேண்டியதன் அவசியத்தை கருத்தில் கொண்டு அவர் கோடாரியை வாங்கி மரத்தை வெட்டத் தொடங்கினார். இந்த தகவல் மகல்சாபதிக்குத் தெரிய வந்தது. அவர் கடும் அதிர்ச்சி அடைந்தார். என்ன செய்வது என்று புரியாமல் திகைத்தார்.
அப்போதுதான் அவருக்கு பாபா நினைவு வந்தது. சீரடி திசையை நோக்கி கைக்கூப்பி பாபாவை நினைத்து வணங்கினார். ‘‘என் பக்தனுக்கு எந்தவித சிக்கலும் இல்லாமல் தங்குவதற்கு உரிய அனுமதிச் சீட்டு கிடைக்க வேண்டும். இதற்கு நீங்கள் உதவி செய்தால்தான் நாங்கள் யாத்திரையை தொடர முடியும். உடனே அனுமதிச் சீட்டு கிடைக்க ஏற்பாடு செய்யுங்கள்’’ என்று கண்ணீர் மல்க வேண்டினார்.

மகல்சாபதியின் நியாயமான கோரிக்கை பல மைல் தொலைவில் இருந்த பாபாவுக்கு தெரிந்தது. உடனே அவர் செயலில் இறங்கினார். கிராம நிர்வாக அதிகாரிக்கு யாரோ காதில் பேசுவது போல கேட்டது. ‘‘எந்த தவறும் செய்யாத பக்தனுக்கு இப்படி வேலைக் கொடுப்பது உனக்கு மேலும் மேலும் கர்மத்தைத்தான் சேர்க்கும். மன சஞ்சலத்தால் நீ கர்மத்தை இப்படி சேர்க்கிறாய். இது நல்லதல்ல’’ என்று கிராம நிர்வாக அதிகாரி காதில் விழுந்தது.

கிராம நிர்வாக அதிகாரி சுற்றும், முற்றும் பார்த்தார். யாரும் இல்லை. தனக்கு உத்தரவிட்டது பாபா என்பதை உணராத அவர் அது வெறும் பிரமை என்று நினைத்தார். கோடாரியை அந்த பக்தனிடம் கொடுத்து மரத்துண்டுகளை வெட்டச் சொன்னார். அப்போது பாபா தன் திருவிளையாடல்களை நடத்தினார்.
பக்தன் ஒரு வெட்டுத்தான் வெட்டினான். மரம் உடையவில்லை. கோடாரி இரண்டு துண்டாக உடைந்தது.

உடனே கிராம நிர்வாக அதிகாரி இன்னொரு கோடாரியை எடுத்து வந்து கொடுத்தார். அந்த கோடாரியும் இரண்டு துண்டாக உடைந்தது. அதைப் பார்த்ததும் கிராம நிர்வாக அதிகாரிக்கு என்னவோ போல் ஆகி விட்டது. அந்த பக்தனிடம் வேலை வாங்காமல் அனுமதிச் சீட்டுக் கொடுக்கக் கூடாது என்று பிடிவாதமாக நினைத்தார்.

எனவே மூன்றாவதாக ஒரு கோடாரியை எடுத்து வந்துக் கொடுத்தார். மரத்தை வெட்டிய போது அந்த கோடாரியும் உடைந்தது. கிராம நிர்வாக அதிகாரிக்கு அதிர்ச்சியாக இருந்தது. அப்போது அவருக்கு ‘‘கர்மத்தை சேர்க்காதே’’ என்று சீரடி சாய்பாபா அசரீரியாக வந்து அறிவுறுத்திச் சென்றது நினைவுக்கு வந்தது.
காவடி எடுத்து யாத்திரை செல்லும் பக்தனிடம் கோடாரியை கொடுத்து மரம் வெட்டும் வேலையைக் கொடுத்தது எவ்வளவு பெரிய தவறு என்பதை உணர்ந்தார். உடனே அந்த பக்தனிடம் மன்னிப்புக் கோரினார்.

பிறகு அனுமதி சீட்டுக் கொடுத்து, அந்த பக்தனை அனுப்பி வைத்தார். அந்த பக்தன் திரும்பிச் சென்று கிராம நிர்வாக அதிகாரி வீட்டில் நடந்ததை எல்லாம் மகல்சாபதியிடம் ஒன்று விடாமல் கூறினார்.

அப்போது கிராம நிர்வாக அதிகாரிக்கு உரிய நேரத்தில் புத்தி புகட்டியது பாபா என்பதை மகல்சாபதி உணர்ந்தார். சீரடி திசை நோக்கி மீண்டும் கண்ணீர் மல்க கைக்கூப்பி வணங்கினார். பிறகு பக்தர்களுடன் காவடி யாத்திரையை சுமூகமாகத் தொடங்கினார்.

மற்றொரு சமயம் மகல்சாபதி தன்னையும் அறியாமல் கர்மம் சேர்த்ததை சீரடி சாய்பாபா உரிய முறையில் சுட்டிக்காட்டினார். பாபா வசித்த துவாரக மாயி மசூதி அருகில் நாய் ஒன்று இருந்தது. அந்த நாய்க்கு மசூதியில் உள்ளவர்கள்தான் தினமும் சாப்பாடு கொடுப்பார்கள்.

குறிப்பாக இரவு நேர உணவை அந்த நாய்க்கு மகல்சாபதிதான் கொடுப்பார். இதனால் மகல்சாபதியைப் பார்த்ததும் அந்த நாய் வாலாட்டிக் கொண்டே வரும்.
ஒருநாள் அந்த நாய் மகல்சாபதி உணவு வைப்பார் என்று ஆசையோடு ஓடி வந்தது. ஆனால் ஏதோ ஒரு கஷ்டத்தில் மனவேதனையில் இருந்த மகல்சாபதி அந்த நாய்க்கு உணவு வைக்கவில்லை. மாறாக அந்த நாயை விரட்டினார்.

என்றாலும் அந்த நாய் அவரையே சுற்றி சுற்றி வந்தது. இதனால் மகல்சாபதிக்கு ஆத்திரம் அதிகரித்தது. மசூதிக்குள் கிடந்த ஒரு கம்பை எடுத்து வந்து அந்த நாயை கடுமையாக அடித்து விரட்டினார். இதனால் அந்த நாய் சத்தமிட்டப்படி ஓடியது.

அந்த சமயத்தில் பாபா மசூதியில் இல்லை. நாயை விரட்டிய பிறகு மகல்சாபதி சாப்பிட்டார். பிறகு தூங்குவதற்கு தயாரானார். மகல்சாபதி தினமும் இரவு மசூதியில் பாபாவுடன்தான் தூங்குவார். பாபா வந்ததும் அவர் கால்களை மகல்சாபதி பிடித்து விட்டார். அப்போது பாபா, மகல்சாபதியை பார்த்தப்படி, ‘‘எனக்கு உடம்பு சரி இல்லை. என்னைப் போல இன்று இங்குள்ள ஒரு நாய்க்கும் உடல் நலம் சரி இல்லை. ஆனால் அந்த நாய்க்கு சாப்பாடு கொடுக்காமல் அடித்து விரட்டி விட்டார்கள்.

என்னிடம் அளவு கடந்த அன்பைக் காட்டுகிறார்கள். ஆனால் வாயில்லா ஜீவனிடம் வெறுப்பைக் காட்டுகிறார்கள். எல்லா உயிர்களிடமும் அன்பு காட்ட வேண்டும். அதில் மாறுபாடு இருக்கக் கூடாது. இல்லையெனில் அதுவே மிகப் பெரிய கர்மம் ஆகி விடும். வாயில்லா பிராணியை அடித்து விரட்டினால் அது எவ்வளவு பெரிய பாவம்? அந்த ஜீவன் சாப்பாட்டுக்கு நம்மை விட்டால் வேறு எங்கே போகும்? என்ன மகல்சாபதி… நான் சொல்வது உங்களுக்குப் புரிகிறதா? என்றார்.

பாபாவின் வார்த்தைகளைக் கேட்டதும், தனது மன வேதனையில் தெரியாமல் எவ்வளவு பெரிய கர்மத்தை செய்து விட்டோம் என்று மகல்சாபதி உணர்ந்தார். பாபா மிக நாசூக்காக தனது தவறை சுட்டிக் காட்டியதை புரிந்து கொண்டு தலை குனிந்தார். மறுநாள் இரவு…. அந்த நாய் மீண்டும் துவாரகமாயி மசூதிக்கு வந்தது. மகல்சாபதியைப் பார்த்ததும் அன்போடு வாலை ஆட்டியது.

மகல்சாபதிக்கு பாபா சொன்ன அறிவுரை நினைவுக்கு வந்தது. ‘‘கர்மத்தை சேர்க்கக் கூடாது’’ என்ற பாபாவின் அமுதமொழி அவர் காதுகளில் ஒலித்தது.
அந்த நாயை வாஞ்சையுடன் தடவிக் கொடுத்தார். அதற்கு இரவு நேர உணவு கொடுத்தார். அப்போது அந்த நாய் குதூகலத்தில் மகல்சாபதி மீது தாவி ஏறி அன்பை வெளிப்படுத்தியது.