இலங்கை அணி ஆஸ்திரேலியா சென்று மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாட இருக்கிறது. இந்த தொடர் 17-ந்தேதி தொடங்குகிறது.
இதற்கான ஆஸ்திரேலியா அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த அணியில் கிறிஸ் லைன் இடம்பிடித்திருந்தார். கடந்த வாரம் பயிற்சியில் ஈடுபட்டிருந்த லைனுக்கு கழுத்தில் காயம் ஏற்பட்டது. இதனால் இலங்கை தொடரில் இருந்து அவர் நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக இடது கை பேட்ஸ்மேன் பென் டங்க் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
பிக் பாஷ் டி20 லீக் தொடரில் அதிக ரன்கள் குவித்தவர் பென் டங்க் என்பது குறிப்பிடத்தக்கது. டங்க் 2014-ம் ஆண்டு தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் இடம்பிடித்திருந்தார். அதில் 2, 23 மற்றும் 14 ரன்கள் எடுத்ததால் அணியில் இருந்து நீக்கப்பட்டார். தற்போது பிக் பாஷ் தொடரில் சிறப்பாக விளையாடியதால் மீண்டும் வாய்ப்பு பெற்றுள்ளார்.