விஷ்ணு விஷால் ஜோடியான சிம்பு நாயகி!

‘மாவீரன் கிட்டு’ படத்தை தொடர்ந்து விஷ்ணு விஷால் தற்போது கதாநாயகன் படத்தை தயாரித்து, நடித்து வருகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக கேத்ரீன் தெரசா நடித்து வருகிறார். மேலும், சூரியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். முருகானந்தம் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இப்படத்தை தொடர்ந்து சிவாஜியின் பேரனும், நடிகருமான துஷ்யந்த்தின் தயாரிக்கும் புதிய படத்திலும் விஷ்ணு விஷால் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார். துஷ்யந்த் ஈஷான் புரொடக்ஷன்ஸ் என்ற நிறுவனத்தின் மூலம் இப்படத்தை தயாரிக்கிறார். இந்நிறுவனம் தயாரிக்கும் இரண்டாவது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, இந்நிறுவனம் பிரபு, காளிதாஸ் ஜெயராம் நடிப்பில் வெளிவந்த ‘மீன்குழம்பும் மண்பானையும்’ என்ற படத்தை தயாரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இப்படத்தில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக மஞ்சிமா மோகன் ஒப்பந்தமாகியுள்ளார். இதனை, விஷ்ணு விஷாலே உறுதிப்படுத்தியுள்ளார். இவர்கள் இணையும் இந்த படத்தையும் ‘கதாநாயகன்’ படத்தின் இயக்குனர் முருகானந்தமே இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மஞ்சிமா மோகன் நடிப்பில் சமீபத்தில் சிம்பு நடித்து வெளிவந்த ‘அச்சம் என்பது மடமையடா’ படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகும் ‘சத்ரியன்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும், உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகவிருக்கும் ‘இப்படை வெல்லும்’ என்ற படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.