தமிழ் அரசியல்வாதிகளிடத்தில் ஒற்றுமை இல்லை!

வடக்கு, கிழக்கு மற்றும் மலையகம் ஆகிய பகுதிகளில் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதிகளிடத்தில் ஒற்றுமை இல்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கொட்டகலையில் அமைந்துள்ள தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த ஜனாதிபதி,

அரசாங்கம் என்ற ரீதியில் இனம், கட்சி, வர்க்கம் என்ற பேதம் இல்லாமல் அனைத்து மக்களுக்கும் சம உரிமையுடன் உரிமைகளை அனுபவிக்கவும் சமத்துவமாக வாழவும் நான் முயற்சி செய்து வருகின்றேன். நமது நாட்டில் 30 வீதத்திற்கு அதிகமானோர் பெரும் வறுமையான வாழ்க்கையை எதிர்கொண்டு வருகின்றனர்.

இதில் தோட்ட தொழிலாளர்களும் உள்ளடங்குவார்கள். எதிர்வரும் காலத்தில் இந்த வறுமையை ஒழித்துக் கட்டுவதற்காக இந்த வருடத்தை வறுமை ஒழிப்பு வருடமாக நான் செயல்படுத்தி வருகின்றேன். உணவு அபிவிருத்தி விவசாய திட்டம் என பல்வேறு திட்டங்களை செயல்படுத்தும் நிலையில் அடுத்த மாதமளவில் காலநிலை சீராகும் பட்சத்தில் இத்திட்டத்தை துரிதப்படுத்த ஏதுவாக அமையும்.

நாட்டின் சிறப்பான எதிர்காலத்திற்காக மக்களை நல்ல முறையில் பிரதிநிதித்துவப்படுத்தி அவர்களின் உரிமைகளை வென்றெடுக்க அரசியல் தலைவர்களிடம் ஒற்றுமை வேண்டும். மலையகத்தில் ஒற்றுமை இன்மை காரணமாகவே பல்வேறு பிரச்சினைகள் மேலெழுந்துள்ளன.

அவர்கள் இங்கு ஒற்றுமையை வளர்த்து மக்களுக்கு சேவை செய்வதுடன் அரசியல் ரீதியாகவும், தனி மனித ரீதியாகவும் அனைவரும் ஒற்றுமையுடன் மலையகத்தில் செயற்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.